மரண தண்டனைக்கு அநுராதபுர மக்கள் ஆதரவாம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 27, 2019

மரண தண்டனைக்கு அநுராதபுர மக்கள் ஆதரவாம்!

தேசத்தின் எதிர்கால தலைமுறையை அழித்துவருகின்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அநுராதபுர மாவட்டத்தில் பரவலாக மக்கள் ஆதரவு எழுந்துள்ளது.

தற்போது அநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் இடம்பெறும் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கண்காட்சி திடலில் தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட கண்காட்சி கூடத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக இது தொடர்பாக மக்கள் கருத்து அறியப்பட்டு வருவதுடன், கண்காட்சியை பார்வையிடவரும் பெருமளவு மக்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் கருத்துக்களின் படி 95 வீதமானவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கெதிராக மரணதண்டனை வழங்குவதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சமயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு தொழில்வல்லுனர்கள், பொதுமக்கள் பெருமளவில் கண்காட்சியை பார்வையிட வருகை தருவதுடன், அவர்கள் அனைவருடையவும் விசேட கவனத்தை இந்த நிகழ்ச்சித்திட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலன் பேணலுக்காக  சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய் ஒழிப்பு, தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், நாட்டுக்காக ஒன்றிணைவோம், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, சிறிய வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விரிவான மக்கள் பணிகள் குறித்து அறிவூட்டப்படுவதுடன், தகவல்களும் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்ச்சித்திட்டமும் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.