மகனை தேடியலைந்த முல்லைத்தீவை சேர்ந்த தாயார் மரணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 24, 2019

மகனை தேடியலைந்த முல்லைத்தீவை சேர்ந்த தாயார் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து தனது மகனை கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலைமுத்து  திரேசம்மா  என்ற தாயார் ஆவார் . தனது மகனான செபமாலைமுத்து  ஜெபபிரகாஸ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த நிலையில் இன்றையதினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .

கடந்த 2008,07.௦1 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் தனது மகனை ஒப்படைந்த நிலையில் இன்றுவரை அவர்குறித்த நிலைமைகள் எதனையும் அறியாத நிலையில் இவர் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார் .

இவருடைய இழப்புக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது .

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம்  திகதி முதல் வலிந்து  காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதிகோரி  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு நடைபெற்றுவரும் போராட்டம்  இன்றைய தினம்(24) 869 ஆவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக  இடம்பெற்று வருகின்றது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் பலர் உயிரிழந்த நிலையில் இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் உறவுகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிர்கள் பிரிவதற்கு முன்பதாக உறவுகளை ஒரு நாளாவது எங்களோடு வாழ விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்துப் காணாமல் ஆக்கபட்ட உறவுகளுக்கான நீதியை கோரி  போராடி வருகின்ற நிலையில் அந்தக் கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மற்றுமொரு தாயார்  இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.