தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கைது!


இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டிருந்தார். 

பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியோரின் அறிக்கைகளின் பிரகாரம், மொஹமத் சஹ்ரானின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒரு உறுப்பினர் கூட, வெளியில் இல்லை என தான் உறுதிப்பட கூறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார். 

காத்தான்குடியில் சஹ்ரானின் நெருங்கிய நண்பர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சஹ்ரானுடன் தேநீர் அருந்தியவர்களை கூட விசாரணைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இந்த நிலையில், இலங்கையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். 

முஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாத கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளை அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்க, அந்த மார்க்கத்திலுள்ள சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவர், நாட்டிற்கு எதிர்காலத்தில் அத்தியாவசியம் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

தற்போதுள்ள அரசாங்கம் எதிர்வரும் நான்கு மாத காலத்திற்கு மாத்திரமே இந்த நாட்டில் செயற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான தலைவர் ஒருவரை, தாம் எதிர்வரும் தேர்லில் களமிறக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

அரசாங்கம் இந்த தாக்குதல் சம்பவத்தை, கீழ் மட்டத்திலுள்ளவர்கள் மீது சுமத்தி, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை காண முடிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஒரு சில முஸ்லிம்களினால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தினால், நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவத்தினால் அதிகளவில் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். 

இந்த பின்னணியில், முஸ்லிம்களின் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் ஆகிய கொள்கைகளுடன் காணப்படுகின்றோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் பொறுப்பு, அந்த மார்க்கத்திலுள்ள மதத் தலைவர்களுக்கே காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

இந்த நிலையில், நாட்டை நேசிக்கும் தலைவர் ஒருவருடனேயே, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியிருந்தார்.