ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் எமது ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தார்.
இதில், ஜனாதிபதி பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியில் பணிபுரியும் இந்திய நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததாக கூறினார்.
பிரதமர் மோடி இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தம் தொடர்பிலேயே இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். இதன் பின்னர் இந்திய நிறுவனத்தின் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானிக்கப்படும்” என ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
அதன் பிரகாரம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இந்தியா 20 சதவிகிதம், ஜப்பான் 29 சதவிகிதம், அதே நேரத்தில் இலங்கை 51 சதவிகிதம் பங்கு வகிக்கும். இந்த கட்டுப்பாடு இலங்கை துறைமுக அதிகாரசபையினால் நிறைவேற்றப்படும்.
மேலும் இலங்கைக்கு அடுத்த வாரம் பிரதமர் மோடி விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார் என்றும் இலங்கையில் ஐ.எஸ்.அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இதன்போது மறுபரிசீலனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்