பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி திருகோணமலையிலும் இருவேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதுடன் கிழக்கிற்கு பொருத்தமான ஆளுநர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.பி.ராஜீ என்பவர் திருகோணமலை அலஸ்தோட்டத்தில் அமைந்துள்ள இறை இரக்க தேவாலயத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதேவேளை வி.ஜெயவேந்தன் என்பவர் திருகோணமலை சிவன் கோயிலிற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை இவருக்கு ஆதரவாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தியே குறித்த இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.