கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் கோரிக்கை தொடர்பிலும் பெருந்தோட்ட மக்களின் 50 ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பிலும் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், சஜித் பிரேமதாஸ, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, மலிக் போன்றோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனுடம் சுமார் 45 நிமிடங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பீக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளது.
தமிழ் மக்கள் பிரச்சினைகளையும் இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது. இதையிட்டு நான் வெட்கமடைகிறேன்.
இன்று இந்நாட்டில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சரவை அமைச்சர்களாக நானும், அமைச்சர் திகாம்பரமும்தான் இருக்கிறோம்.
எனவே இந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் தொடர்பில் எனக்கு கடப்பாடு இருக்கிறது. வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு, தெற்கு திசைகளில் இந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமது பிரச்சினைகள் தொடர்பில் நான் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆகவே நான் இவைபற்றி இந்நாட்டின் அதியுயர் சபையான இந்த அமைச்சவையில் பேசுகிறேன்.
இன்று காலை இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நான் வரமுன் நானும், கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரனும் கலந்துரையாடினோம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒரு முழுநேர கணக்காளர் ஒருவரை நியமிப்பதாக அரசாங்கத்தின் துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தன எழுத்து மூலமாக கூட்டமைப்புக்கு உறுதி கூறியுள்ளார் என அவர் எனக்கு கூறினார். அந்த கடிதத்தை நானும் நேரடியாக வாசித்தேன்.
இந்த நியமனம் நேற்று திங்கட்கிழமையே வழங்கப்பட உள்ளதாகவும், அது இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் சுமந்திரன் குற்றம் சாட்டுகிறார். இதற்கு, துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் என்ன பதில் கூறுகிறீர்கள் என நான் இங்கே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
இன்று எங்கள் பிரச்சினைகளை நீங்கள் பின்வரிசையில் போட்டுள்ளீர்கள். இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் அமைச்சரவையில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்துக்கொண்டபோது, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும், துறைசார் அமைச்சருடனும், கடுமையாக வாக்குவாதப்பட்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் எனக்கும் இருக்கின்றன.
இருந்தாலும் இன்று நாடு முழுக்க இப்படியான இன மத அடிப்படையில் பிரதேச செயலகங்கள் உள்ளன. வவுனியா தெற்கில் நிலத்தொடர்பற்ற சிங்கள பிரதேச செயலகம் உள்ளது. முஸ்லிம் மக்களை மையமாக வைத்தும் பிரதேச செயலகங்கள் உள்ளன.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமது பிரதேச செயலகங்களை தரமுயர்த்த முயலும் போதும், அமைக்கும் போது மட்டும் ஏன் தடை போடுகிறீர்கள்? ஏன் இதை மாத்திரம் அரசாங்கம் இழுத்தடிக்கின்றது?
ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி தமிழர்களின் இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
உண்மையில் முஸ்லிம் மக்களுக்கு இந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைகள் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆகவே அதையும் தொடர்ந்து இழுத்தடிக்காமல் பேசி தீர்க்க வேண்டும்.
அதற்கு முன் அரசாங்கம் உறுதியளித்தது போல் முதலில் முழுநேர கணக்காளர் ஒருவரை இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நியமிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த பிரச்சினை காரணமாக ஆரப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. வட கிழக்கில் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் இந்த பிரச்சினை மூலம் இன உறவு சீர்கெடுகிறது. அதை இனியும் அனுமதிக்க முடியாது.
வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு, தெற்கு திசைகளில் வாழும் தமிழர்கள் மிக அதிகமான சிறுபான்மை இன வாக்குகளை வழங்கி இந்த நல்லாட்சி ஜனாதிபதியை உருவாக்கினோம்.
அதேபோல் அரசாங்கத்துக்குள் இருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உங்களை பாதுகாக்கிறது. வெளியே இருந்தபடி தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்களை பாதுகாக்கின்றது.
இந்த உண்மைகளை ஜனாதிபதியும், பிரதமரும் மறந்து விடக்கூடாது.
உண்மையில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது. எங்கே நீங்கள் தருவதாக சொன்ன புதிய அரசியலமைப்பு? எங்கே அரசியல் தீர்வு?
எங்கே அரசியல் கைதிகள் விடுதலை? நேற்று ஒரு தமிழ் கைதி பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்து இறந்து போயுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
இன்று புலிகளின் ஆயுத போராட்ட யுகம் முடிந்து, சஹரானின் ஆயுத போராட்ட யுகம் ஆரம்பித்துள்ளது. எனினும் இன்னமும் புலிகளின் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் என நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
எதிர்வரும் வாரத்தில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நான் கொண்டு வர உள்ளேன். இங்கே உள்ள அமைச்சர்கள் எவரும் அது தொடர்பில் தமது கருத்துகளை தெரிவியுங்கள். தமிழ் மக்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
அமைச்சர் வஜிர அபேவர்தன
இதன்போது அமைச்சர் மனோ கணேசனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வஜிர அபேவர்தன, அடுத்த ஒரு வாரத்துக்குள் பிரதமர் தலைமையில் நடைபெறும் கலந்துரையாடலில், தானும், அமைச்சர்கள் மனோ கணேசன், தயா கமகே , தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் நியமனம் தொடர்பிலும், உப செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்படும் என கூறினார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க
இதன்போது கருத்து கூறிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சர் மனோ கணேசனுடன் தான் முழுமையாக உடன்படுவதாகவும், இந்த விடயத்தை இனியும் இழுத்தடிக்க கூடாது என கூறினார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன
இதன்போது கருத்து கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் மனோ கணேசன் கூறிய தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என கூறினார்.