மன்னார் சமூர்த்தி பயனாளிகளில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கான உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 10,113 பேருக்கு உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த வயோதிப தாய் ஒருவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தனக்கு சமூர்த்தி உரித்து வழங்கவில்லையென்றும், ஆனால் புதுத்தளத்தைச் சேர்ந்த 120 பேரின் பெயர்கள் சமூர்த்தி உதவி பெறுபவர்களாகக் காட்சிப் படுத்தப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட எந்த சமூகத்தினருக்காவது சமூர்த்தி உதவியை வழங்குங்கள்.
ஆனால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இங்கு சமூர்த்தி பயனாளிகளாக இணைக்க வேண்டாம்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயனாளிகளாக இணைக்கப்பட்டார்களா ? என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெளிவுபடுத்த வேண்டும்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.