இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த பொதுமகனான ரிஷ்வின் இஸ்மத் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ரிஷ்வின் இஸ்மத், யுத்த காலத்தின் போது 1990ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டு, மாவனெல்ல பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இதன்போது, முழுமையாக இஸ்லாத்திற்கு தன்னை அர்ப்பணித்த தாம் , 2013ஆம் ஆண்டு காலப் பகுதியில் இஸ்லாத்தில் காணப்படுகின்ற சில தவறான சிந்தனைகளை புரிந்துக்கொண்டு அதிலிருந்து வெளியேறியதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிடுகின்றார்.
தற்போது தான் எந்தவொரு மதத்தையோ அல்லது மார்க்கத்தையோ பின்பற்றவில்லை என்பதுடன், அதனை அவதானித்த சஹரான் உள்ளிட்ட சிலர் தன்னை கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் அவர் நேற்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியளிக்கும்போது குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தன்னிச்சையாக வருகைத் தந்தே, ரிஷ்வின் இஸ்மத் நேற்றைய தினம் சாட்சியளித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு விடயங்களை கருத்திற் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, கொலை அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை இரகசியமான முறையில் ஊடகங்கள் இன்றி தம்மிடம் முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, தன்னிடம் மேலும் பல்வேறு தகவல்கள் காணப்படுவதாகவும், அதனை முன்வைக்க தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர் தெரிவுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு அனுமதி வழங்கிய போதே, இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் தவறான கொள்கைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதை ரிஷ்வின் இஸ்மத் வெளியிட்டார்.
1980ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குற்றங்களும், தண்டணைகளும் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வெளியிட்டார்.
‘ரித்தத்” என்ற சொல் குறிப்பிடப்பட்டு, அதற்கு முன்பாக எச்சரிக்கைகளின் பின்னர் கொலை என்ற சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று, பின்னர் அதனை விட்டு வெளியேறுவோர் அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களுக்கு செல்வோர் ‘ரித்தத்” என அரபில் கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சினால்; இஸ்லாமிய பாடநெறியை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இலவச பாடப்புத்தகத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் ரிஷ்வின் இஸ்மத் வெளியிட்டார்.
அத்துடன், இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறும் ஒருவர், துரோகத்தை இழைத்தவராக கருதப்படுவார் என 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களை பிற்பற்றுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக கொலை செய்யப்பட வேண்டும் என்ற வசனமே பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என குறனில் எங்கும் கூறப்படவில்லை என தெரிவித்த அவர், இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என ஹதீஸில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எகிப்து நாட்டிலுள்ள பேதகரான யூசுப் அல் கர்தாரி என்பவரினால் அந்த நாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமிக்கினால் வெளியிடப்படுகின்ற மாதந்த சஞ்சிகையான அல்-ஹசனா சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லாத பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கம் அழிந்து போய் விடும் எனவும், தற்கொலை தாக்குதல் சரி என்ற விதத்திலும் இந்த சஞ்சிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையில் அந்த கட்டுரையை எழுதிய நபர் ‘தற்கொலை” என்பதற்கு பதிலாக ‘தற்கொடை” என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் ரிஷ்வின் இஸ்மத் கூறுகின்றார்.
தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக, தனது உயிரை கொடை செய்தல் என பொருட்படும் விதத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரிஷ்வின் இஸ்மத்திடம் இறுதியாக தெரிவுக்குழு இரகசிய விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.