கதிர்காம யாத்திரிகர்களின் அந்த பயணத்தின் ஆரம்பத்தை "அரோகரா" எனும் ஒலியுடன் ஆரம்பித்துவைத்தது ஒரு தமிழராக எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. நான் தான் முதன்முதலாக அந்த கதவை திறக்க களத்துக்கு வந்த அமைச்சர் என்கிறார்கள் அந்த முருகன் அழைத்ததும் இந்த கணேஷன் ஓடிவந்தேன்.
பாரம்பரிய கலாச்சார பண்புகள் மிக்க கிழக்கிலங்கை தமிழர்கள் சகோதர இன, மத மக்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும். அவர்களையும் நாம் அரவணைத்து செல்ல வேண்டும்.
நமது அடையாளங்களையும், சம்பிரதாயங்களையும் அதிகமாக முன்னெடுத்தால் அது ஆபத்து, அவர்களின் எதிர்ப்பை நாம் எதிர்கொள்வதோடு நாம் காணாமல் போய்விடுவோம். என காரைதீவு விபுலானந்தா பணி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
நாம் தமிழர்களின் இருப்பையும் சகோதர இன மக்களின் அரவணைப்பையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். தமிழர்கள் தங்களில் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாம் நமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு போராடுகின்ற அதே நேரம் இந்த நாட்டில் உள்ள சகோதர இன, மத மக்களையும் அனுசரித்து செல்ல வேண்டும். தூக்கமில்லாமல் மனோதிடத்துடன் எப்போதும் உங்களுக்காக பணியாற்றிவரும் நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்.
பாரம்பரியமாக வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து வருடாந்தம் கதிர்காமத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதயாத்திரை அரச அங்கீகாரத்துடன் தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை பத்திரம் ஒன்றை நான் சமர்ப்பிக்க உள்ளேன்.
பொத்துவிலில் எமக்கு சொந்தமான ஒரு காணி பிரச்சினையில் இருப்பதாகவும் அந்த காணியில் கட்டிடம் கட்ட நாங்கள் முன்னெடுத்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறேன். அந்த மணடபத்தை கட்டிமுடிக்க இந்து விவகார திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர் , அரச அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
நாட்டில் தமிழர்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்துவதோடு சகோதர இன, மத மக்களை அரவணைக்க வேண்டும். அப்போதுதான் சமூக நல்லிணக்கத்தினை பாதுகாத்துக் கொண்டு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப் படுத்தமுடியும் என்றும் எங்களுடைய பரந்த மனதை பார்த்து அவர்கள் பலவீனமானவர்களாக எண்ணிவிடக்கூடாது என்றார்.
தொடர்ந்தும் பேசிய அவர், தமிழன் என்ற திமிர் பிடித்தவன் நான், திமிர்தான் வேலைக்கு ஆகும் , எங்கே எதை காட்டவேண்டும் என்பதை நான் நன்றாக அறிந்துள்ளேன். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தை மேலும் புனரமைப்பு செய்து தளபாடங்கள் கொள்வானவு செய்ய 28 லட்சம் ரூபாயை ஒதுக்கி தருகிறேன் என்றார். இந்நிகழ்வில் பிரதேச கோவில்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு நிதியுதவியும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ரத்மானந்த ஜீ மகராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிரில், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் திரு. ஜெயராஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு உமா மகேஸ்வரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகதீசன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்