கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த அமரசிங்கம் பகீரதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காரணமாக கடந்த 10 வருடங்களாக இருந்து வந்த நிரந்தர பதிவாளர் வெற்றிடம் நிரப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்துக்கமைய உபவேந்தரால் இந்நியமனம் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
அமரசிங்கம் பகீரதன் கிழக்குப் பல்கலைக்கழத்தின் வியாபார நிர்வாகப் பட்டதாரியும், வியாபார நிருவாகப் முதுமாணிப் பட்டதாரியுமாவார். அத்துடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா கற்கையையும் இவர் நிறைவு செய்துள்ளார்.
பட்டம் பெற்ற 1996ஆம் ஆண்டு முதல் 1999 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும், விடுதிக் காப்பாளராகவும் இவர் பணியாற்றிய பின் 1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராக நியமனம் பெற்றிருந்தார்.
அங்கிருந்து 2002 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று கிழக்குப் பல்கழலைக்கழகத்தில் இணைந்து கொண்ட பகீரதன் உதவிப் பதிவாளர், சிரேஸ்ட உதவிப் பதிவாளர், பிரதிப் பதிவாளர், பதில் பதிவாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.