அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 21, 2019

அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு!

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இதுதொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததனையடுத்தே குறித்த பாடசாலையின் அதிபரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு கௌரவ ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும்  ஆளுநர் அவர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் வடமாகாணத்தில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது எனக் குறிப்பிட்ட  ஆளுநர், இவ்வாறு மோசமாக நடந்து கொள்பவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நீதித்துறையினூடாக அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டதோடு, வடமாகாண கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.