முன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 26, 2019

முன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்?


அனுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சன் மற்றும் திருவருள் உள்ளிட்டோரை விடதலைப்புலிகளின் போர்க்குற்றங்கள் வகைப்படுத்தலில் சிக்கவைக்க அரசு மும்முரமாகியுள்ளது.இதற்கேதுவாக கைதாகி விடுவிக்கப்பட்ட மலையகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சட்டமா அதிபர் திணைக்களம் தயார் செய்து அழைத்து வந்துள்ளது.

வன்னியில் இருந்த வேளை விடுதலைப்புலிகளால் சந்தேகத்தில் கைதாகி பின்னர் இறுதி யுத்த காலத்தில் தப்பித்து சென்ற குறித்த நபரை தயார் செய்து முன்னாள் போராளிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே மரம் வெட்டும் வேலைக்கு சென்றவர், லக்சமன் கதிர்காமர் கொலையில் 15 வருட சிறையில் இருந்து பலியான சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

வேலியில் உள்ள மரங்களை வெட்ட சென்றவர், அந்த வேலி மரங்களை வெட்டியதால் இலகுவாக குறிவைத்து கதிர்காமர் கொல்லப்பட்டார். எனவே இவர் வேண்டுமென்றே திட்டமிட்டே வேலி மரத்தை வெட்டினார் என்றே சிறையில் வைத்து 15 வருடங்கள் கடந்து சிறையிலேயே மரணமாகிவிட்டார்.
இத்தனைக்கும் அது அவரது வீட்டு வேலி அல்ல. கூலி வேலைக்கு சென்று வெட்டியதே அந்த மரங்கள்.


இது தொடர்பில் உயிரிழந்தவரது மனைவி வழங்கிய செவ்வியில் எனது கணவருக்கும் லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செய்யாத தவறுக்கு சிறையில் இருப்பதை நினைத்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது என தெரிவித்த, உயிரிழந்த அரசியல் கைதியான சகாதேவனின் மனைவி, விடுதலையாகுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தவர் இன்று விடுதலையாகாமலே எம்மை விட்டு சென்றுவிட்டார் என கதறுகிறார்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிறைவைக்கப்பட்டிருந்த முத்தையா சகாதேவனின் மனைவி மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள். 1983 கலவரத்துக்குப் பின்னர்தான் கொழும்புக்கு வந்தோம். அப்படியே இங்கேயே இருந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை சந்தோசமாகத்தான் இருந்தது.

என்ன நடந்ததோ தெரியாது, எந்தக் குற்றமும் செய்யாத எனது கணவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.வீடு, தோட்டங்களைத் துப்பரவு செய்வதற்காக எனது கணவரை அழைப்பார்கள். அவ்வாறானதொரு வேலைக்குத்தான் அன்றும் அவர் சென்றிருந்தார். வீட்டு உரிமையாளர் பணித்த தோட்ட வேலையை செய்திருக்கிறார். தோட்டத்தைச் சுத்தம் செய்ததோடு மதில் சுவரோடு இருந்த மரக்கிளைகளையும் வெட்டியுள்ளார். அதுவே கைதுக்குக் காரணமாக அமையும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.


அவர் துப்பரவு செய்த தோட்டத்தின் அடுத்த வீட்டில்தான் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்திருக்கிறார். அங்குவைத்துதான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கொலைசெய்யப்பட்டதோடு எனது கணவருக்கு தொடர்புள்ளது என கூறி 2005ஆம் ஆண்டு எனது கணவரைக் கைதுசெய்தார்கள். 2008ஆம் ஆண்டுதான் வழக்குப் பதிவுசெய்தார்கள்.

இன்றுவரை வழக்குக்குப் போய் வருகிறேன். எதிர்வரும் 27ஆம் திகதியும் வழக்கு இருக்கிறது. இருந்த நகைகளை விற்று, கடன்வாங்கித்தான் வழக்குக்குப் போய் வந்தேன். எப்படியும் நான் வெளியில் வந்துவிடுவேன் என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இன்னுமொருவர் 6 மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். எல்லோரும் விடுதலை செய்யப்படுகிறார்கள், எந்த குற்றமும் செய்யாத என்னை மட்டும் ஏன் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று மனமுடைந்து காணப்பட்டார். 62 வயதான என் கணவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சிறுநீரகமொன்று செயலிழந்திருக்கிறது. அதன் பின்னரே அவர் மோசமாக நோய்வாய்ப்பட்டார்.

நீரிழிவு நோயும் இருந்ததால் அதற்கும் மருத்துவம் செய்துகொண்டுதான் இருந்தார். இறுதியில் மற்றைய சிறுநீரகமும் செயல்பாட்டை இழக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக்கும் சிறைச்சாலை வைத்தியசாலையில்தான் சிகிச்சைப் பெற்றுவந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்தான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு மாதகாலமாக சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த நிலையில் தான் அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார் என கண்ணீருடன் கூறினார்.