சிறுபான்மை முஸ்லீம் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதில் தென்னிலங்கை தொடர்ந்தும் மும்முரமாகவேயுள்ளது.
அவ்வகையில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்க வேண்டாமென, சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மகிந்த தரப்பு விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில் நபரொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போது, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நபர்களும் பதவி விலகியமையானது, முஸ்லிம் சமூகத்துக்குள் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைச்சுப் பதவிகளிலிருந்தோ, ஆளுநர் பதவியிலிருந்தோ விலகினால் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடாது. எனவே பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்றும் மற்றொரு மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பில், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரிசாட்டின் நண்பரான கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியரான மொஹமட் சாபி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவினரால், 4 அடிப்படை காரணங்களை கொண்ட இடைக்கால அறிக்கையொன்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா நேற்று (03) தெரிவித்துள்ளார்.அத்துடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 644ஆக உயர்வடைந்துள்ளது.