இந்தோனேஷியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் கலவரங்களுக்குக் காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் பெயர்களைக் பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
முன்னாள் ராணுவ ஜெனரல்கள் இருவரும், ஜகார்த்தா பொலிஸ் முன்னாள் தலைவர் ஒருவரும் அந்தக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற ஜெனரல் கிவ்லன் ஸென், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சொனார்கோ, ஓய்வுபெற்ற பொலிஸ் தலைவர் சொஃபியான் ஜேக்கப் ஆகியோரே இதில் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்தநிலையில் அவர்கள் மூவர் மீதும் தேசத் துரோகக் குற்றங்கள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூவரும், தேர்தலில் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவை எதிர்த்துக் களமிறங்கிய பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்றுவரும் விசாரணை குறித்து ராணுவமும் பொலிஸாரும் கூடியவிரைவில் மேலதிக விவரங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது