இலங்கையில் கிறிஸ்தவ தேவாயங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஈஸ்டர் நாளில் நடந்த குண்டுவெடிப்புகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட போது, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நாட்டில் பிரச்சினை இருப்பதாக சிலர் உணர்ந்தார்கள். அவ்வாறு உணர்ந்தவர்களில் ஒருவர் முகமது ரஸாக் தஸ்லீம் என்று பிபிசியின் செக்குண்டர் கெர்மானி கூறுகிறார்.
மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் முகமது ரஸாக் தஸ்லீமின் வலி அவருடைய முகத்தில் பிரதிபலிக்கிறது. அவருடைய உடலின் இடதுபாகம் முழுக்க செயலிழந்துவிட்டது. ஆனால் தனக்கு ஆதரவாக நிற்கும் தன்னுடைய மனைவி மற்றும் மைத்துனரை வலது கையால் பிடித்துக் கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.
அவருடைய மனைவி பாத்திமா, அவருடைய தலையில் கைக்குட்டை வைத்து மூடுகிறார். அவருடைய மண்டை ஓட்டின் ஒரு பக்கம் குழி விழுந்தது போல ஆகிவிட்டது. மார்ச் மாதம் அந்த இடத்தில் அவர் சுடப்பட்டிருக்கிறார். அப்போதிருந்து அவரால் பேச முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை.
ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த தொடர் தற்கொலைப் படை தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாத குழுக்களின் இலங்கை தீவிரவாத குழுக்களின் தாக்குதலில் முதலில் சிக்கியவர்களில் ஒருவர் தஸ்லீம் என்று காவல் துறை நம்புகிறது.
தாக்குதல் பிரிவின் தலைவர் சஹரான் ஹாஷிம் உத்தரவின் பேரில் இவர் தாக்கப் பட்டிருக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
குண்டுவெடிப்புகளுக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மத்திய இலங்கை நகரைச் சேர்ந்த, 37 வயதான துடிப்பான உள்ளூர் அரசியல்வாதியான தஸ்லீம், தீவிரவாதிகள் பற்றி புலனாய்வு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து செயல்பட்டிருக்கிறார்.
இலங்கையில் அடிப்படைவாத சக்திகள் தலையெடுப்பதைத் தடுக்க இஸ்லாமிய சமுதாயத்தினர் எந்த அளவுக்கு முயற்சி செய்தனர் என்பதற்கும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னதாக தரப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை அரசு நிர்வாகம் திரும்பத் திரும்ப உணரத் தவறிவிட்டது என்பதற்கும், தஸ்லீம் குறித்த விவரங்கள் அத்தாட்சியாக உள்ளன.
தலைநகர் கொழும்புவில் இருந்து சில மணி நேர பயண தூரத்தில் உள்ளது மாவனெல்ல நகரம். பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த நகரம். புத்த மதத்தவர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்தப் பகுதியில் பல புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. பதற்றத்தை ஏற்படுத்தி, சமூக மோதல்களை உருவாக்கும் முயற்சியாக அந்தச் சம்பவங்கள் நடந்திருப்பதாக அதிகாரிகள் இப்போது நம்புகிறார்கள்.
மாவனெல்லா நகர கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார் தஸ்லீம். தேசிய கேபினட் அமைச்சருக்கு ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பணிபுரிந்தார்.
அவருடைய மனைவி, 3 இளம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை மாவனெல்லா நகருக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவர்களுடைய சிறிய வீட்டில் நான் சந்தித்தேன். தன்னுடைய கணவரைப் பற்றி பாத்திமா கூறிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கூரையின் மீது தேங்காய்கள் விழுந்து சப்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
தங்கள் சமூகத்தில் பிறருக்கு தானாக முன்வந்து உதவி செய்யக் கூடியவர் தஸ்லீம் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்களுக்கு உதவிகள் திரட்டுவதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே, புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட போது, அதுபற்றி புலனாய்வு செய்ய அவர் முயற்சித்ததில் வியப்பு ஏதும் இல்லை.
`வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அவர் எப்போதும் கூறிக் கொண்டிருப்பார்.''
``இதுபோன்ற செயல்பாடுகளை எங்கள் மதம் மன்னிப்பதில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்வார்.''
பலரை காவல் துறையினர் கைது செய்தபோதிலும், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் சாதிக், ஷாகித் அப்துல்-ஹக் ஆகிய சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, ``தீவிரமாக தேடப்படும்'' நபர்கள் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் அவர்களுக்குப் பங்கு இருப்பதாகக் கூறப்படுவது பற்றி உறுதி செய்யப்படவில்லை. இன்னும் விசாரணை தொடங்கவில்லை. ஆனால் சாதிக் அப்துல்-ஹக் 2014ல் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தொடர்புடைய தீவிரவாத குழு தலைவர்களை சந்தித்திருக்கிறார் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.