உயிர்த்த ஞாயிறன்று நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹிம் தனது மனைவிக்கு இறுதியாக அனுப்பிய குரல்பதிவுச் செய்தி தற்போது வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்சாப் இப்ராஹீம் மனைவிக்கு அனுப்பிய அந்த குரல்பதிவுச் செய்தியை அமெரிக்க விசாரணையாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த குரல் பதிவில், ‘எதற்கும் மனம் கலங்கக்கூடாது நான் இறைவனிடம் செல்கிறேன்’ என பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் தரவேண்டியவர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களிடம் பணத்தை கேட்டு பெறுமாறு மனைவியை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வீட்டில் இருக்கும் இரண்டு கார்களில் ஒன்றை விற்றுவிடுமாறும் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரபல தொழிலதிபரான யூசுப் மொஹமட் இப்ராஹிமின் புதல்வர்களான இன்ஷாப் இப்ராஹிம், அவரது சகோதரரான இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரே நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர்கள். இன்சாப் இப்ராஹிம் அரச ஏற்றுமதியாளருக்கான விருதை கடந்த 2016ஆம் ஆண்டு பெற்றவராவார்.
அத்துடன் 38 வயதான இன்ஷாப் இப்ராஹிம் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் கொழும்பு நகரில் 1.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான வீட்டில் வசித்து வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.