கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிமித்தம் பல முக்கிய இடங்களின் நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. முன்னரைப் போல பயணிகளை வழியனுப்ப யாரும் உள்ளே செல்ல முடியாது. அத்தோடு, வெளிநாடுகளிலிருந்து வருபவர்களையும் வரவேற்க யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் வீதியிலேயே பயணிகளை வழியனுப்பிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, பயணிகளை வரவேற்க மணிக்கணக்கில் கால்கடுக்க வீதிகளில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டாலும் கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. எனினும், தற்போது சோபையிழந்து காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வீதியில் ஆறு அடி நீளமான குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. குழாயொன்றில் பொருத்தப்பட்ட நிலையில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்களை அடையாளம் காணக்கூடிய மென்பொருள் அடங்கிய கணினி கட்டமைப்பு சகல கரும பீடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் தாக்குதல் பீதியில் வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நாளொன்றிற்கு 7 ஆயிரம் வரையான பயணிகள் வெளியேறும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது இரண்டாயிரம் வரையான பயணிகளேவெளியேறுகின்றனர். இதனால் விமான நிலையம் வெறிச்சோடிக் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
தாக்குதல்தாரிகளின் திட்டம் முற்றாக முறியடிக்கப்படவில்லையென புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தவண்ணமுள்ளன. அதனை நிரூபிக்கும் வகையில் நாளாந்தம் வெடிபொருட்களும், ஆயுதங்களும் மீட்கப்படுவதும் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படுவதும் தொடர்கின்றது.
இந்நிலையில், நாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக காணப்படும் கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது உச்சகட்ட பாதுகாப்பில் உள்ளது