ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு: தமிழரசுக் கட்சி தீர்மானம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 18, 2019

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு: தமிழரசுக் கட்சி தீர்மானம்


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தினால் தமிழ் மக்கள் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மீது திட்டமிட்டு குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நிச்சயமாக அவசரகால சட்டத்தை எதிர்க்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை விடுவிக்க கோரியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது  இராணுவதளபதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது,  அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்திற்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காக அவர் மீது கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு அவருக்கும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்வந்தராக வந்தார்? என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.