கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு என தொடங்கும் வகையிலான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த துண்டுபிரசுரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், புலனாய்வுத்துறை க.செந்தமிழ் என உரிமை கோரப்பட்டுள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த துண்டுப்பிரசுரங்களில் 03.05.2019 என திகதியிடப்பட்டுள்ளதுடன், இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தமிழர்கள் மீதே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி போலியாக இந்த துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து சுமூகமான நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் கடந்த 21ஆம் திகதி முதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், தற்போது அதனை திசை திருப்பும் நோக்குடன் இந்த துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.
தீவிரவாத இயக்கமொன்று இலங்கையில் பாரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தெரிவித்து ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளையும், தமிழர்களையும் இலக்கு வைத்து மேற்படி சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வவுணதீவு பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் முன்னாள் போராளிகள் மீது எந்தவொரு ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது குறித்த கொலையை செய்தவர்கள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்களையும், முன்னாள் போராளிகளையும் நசுக்கவும், வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் இராணுவ மயமாக்கலை ஏற்படுத்தவும் இலங்கையில் குண்டு வெடிப்பு தாக்குதலை மேற்கொண்டவர்களும், வேறு சிலரும் இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவதாக அப்பகுதியிலுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார்