இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தோன்றியுள்ளன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார்.
எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபா பங்குகள் கிடைத்தன என்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, இந்த விடயம் குறித்து விசாரிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும், கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், அதனை கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.
தமக்கும் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏதும் கிடையாது என்றும், அவரது திருமணத்தில் ஒரு விருந்தினராக பங்கேற்றேன் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக- அவரை பதவி நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று திருகோணமலை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தினால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் செயலிழந்திருந்தன.