எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் எச்சரிக்கையை அடுத்தே தாம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செல்லவில்லை என்று இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்த செய்தியை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முற்றாக நிராகரித்துள்ளார்.
தமது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி தாம் கொழும்பில் தேவாலயம் ஒன்றில் ஆராதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன்போது குண்டுத் தாக்குதல் குறித்த எந்த விபரங்களையும் அறிந்திருக்கவில்லை என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
குண்டு வெடிப்பு இடம்பெற்றதன் பின்னர் தாம் உடனடியாக புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த தினம் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து, தமக்கு குண்டுத் தாக்குதல் குறித்து முன்னதாகவே எச்சரித்தமைக்காக சுமந்திரன் நன்றி கூறியதாக இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது.
இந்த செய்தியை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் சுமந்திரன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.