கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்று இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
நாளை கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபைக்குட்பட்ட சகல உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்களை அவசர கலந்துரையாடலிற்கு கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள ஆளுனர் அலுவலகத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. காலை 10 மணிக்கு, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேரையும் சந்திப்பிற்கு அழைத்துள்ளார்.
மதியம் 1 மணிக்கு கிழக்கு மாகாணசபைக்குட்பட்ட சகல உள்ளூராட்சிசபைகளின் தலைவர்கள், பிரதி தலைவர்களை சந்திப்பிற்கு அழைத்துள்ளார்.
இந்த அழைப்புக்களையடுத்து, இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் அலுவலகத்தில் இன்று இரவு கலந்துரையாடல் நடந்தது.
கிழக்கு ஆளுனரின் அழைப்பை ஏற்பதா, விடுவதா என்பது தொடர்பில் நடந்த கலந்துரையாடலில், ஆளுனரின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென முடிவானது.
ஹிஸ்புல்லாஹை கிழக்கு மாகாண ஆளுனராகவே தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதால், அவரது அழைப்பையும் ஏற்பதில்லையென முடிவானது.
ஆளுனரின் அழைப்பை ஏற்று செல்லலாம் என ஒருவர் சிலர் தெரிவித்தபோதும், ஏனைய பிரமுகர்கள் அதை அடியோடு நிராகரித்தனர்.
இதன்படி கடந்த கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும், உள்ளூராட்சிசபைகளின் தலைவர், உப தலைவர்களும் கலந்துகொள்ள மாட்டார்கள்.
நாளை மட்டக்களப்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இதை பகிரங்கமாக அறிப்பதென்றும் முடிவானது.