யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி பறிக்கப்பட்டது ஏன்? எப்படி? வெளியான பல தகவல்கள். - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 8, 2019

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி பறிக்கப்பட்டது ஏன்? எப்படி? வெளியான பல தகவல்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் எந்த வித காரணமும் கூறப்படாமல் துணைவேந்தர் பதவியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அதிகாரங்களைவிட அதிகளவான அதிகாரங்களுடன் தகுதி வாய்ந்த அதிகாரியாக அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த

மூத்த பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ளஅதிகாரங்களின் அடிப்படையிலேயே இலங்கையிலுள்ள எந்த வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர் நியமனம் இடம்பெறுகின்றது.

அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் ஆளும் அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவையில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் திறமைகள் தகுதிகள் காண்பிக்கப்பட்ட பின் நடாத்தப்படும் தேர்தல் ஒன்றின் மூலம் வாக்குகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெறுகின்றவர்களின் பெயர்கள் பேரவையின் சிபார்சுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரையுடன், உயர் கல்வி அமைச்சரினூடாக குறித்த பெயர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும்.

சகல மட்டங்களிலிருந்தும் கிடைக்கின்ற சிபார்சுகள், பரிந்துரைகளுக்கு மேலதிகமாக முன்மொழியப்பட்டவர்களின் சுய விபரங்கள் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புக்களின் அடிப்படையில் யாரைத் துணைவேந்தராக நியமிப்பது என்பது ஜனாதிபதியின் கையிலேயே தங்கியிருக்கும்.

ஜனாதிபதியினால் துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் யார்? அவர் தகைமை என்ன? பல்கலைக்கழகப் பேரவையின் தேர்தலில் அவர் எத்தனையாம் இடத்தைப் பெற்றார் என்பதெல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதின் நியமனத்தில் யாரும் எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாதென்பது சட்டம்.

இந்தச் சட்ட ஏற்பாடுகளுக்கமைய நியமிக்கப்படும் துணைவேந்தர் ஒருவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு. அதே போல 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் அத்தியாயம் 20 பிரிவு ‘4’ உப பிரிவு ‘பி” இன் படி நாட்டில் எற்படுகின்ற அசாதாரண சூழ் நிலைகள், பல்கலைக்கழகத்தினுள் ஏற்படுகின்ற ஸ்திரமின்மை போன்ற காரணங்களினால் பல்கலைக்கழகத்தை மூடுவதற்றும் துணைவேந்தருக்குப் பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கும் உயர் கல்வி அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.



ஆக, வெளியில் தெரிந்தவரை ஜனாதிபதிக்கிருக்கின்ற அதிகாரங்களின் படி நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ஒருவரை அதே அதிகாரங்களைப் பாவித்து ஜனாதிபதி பதவி நீக்கினார் என்பதும் அமைச்சருக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பது தான் செய்தி.

ஆனால் அதன் பின்னணியில் பல நுண் அரசியல் புரையோடிப் போயிருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் 2017 மார்ச் மாதத்துடன் நிறைவுக்கு வருவதை அடுத்து புதிய துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்த ஐந்து பேரில் இருந்து மூன்று பேரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வதற்காக யாழ். பல்கலைக்கழக பேரவை 26.02.2017 அன்று கூடியது.



பேரவையில் விண்ணப்பதாரிகள் ஐவரும் தமது பதவிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பற்றிய தங்கள் சிந்தனைகளை முன்னிறுத்தி பேரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தற்குப் பின், புதிய துணைவேந்தருக்கான தேர்தல் இடம்பெற்றது.

வாக்குப் பதிவின் நிறைவில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா, போராசிரியர் இ.விக்னேஸ்வரன் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம் இடங்களில் நிற்க மூன்றாவது இடத்துக்கான தெரிவு சமநிலையில் இருந்ததனால் மறு வாக்குப் பதிவின் மூலம் பேராசிரியர் ரீ.வேல்நம்பி மூன்றாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு மூவரின் பெயர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வழமையாக பதவியில் இருக்கின்ற துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவதற்குள் புதியவரின் நியமனம் குறித்த ஜனாதிபதியின் அறிவித்தல் வெளியாகிவிடும். ஆனால் அந்த முறை அப்போது பதவியில் இருந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டதோடு, புதிய துணைவேந்தர் நியமனம் பின் தள்ளப்பட்டிருந்தது.



அந்த நேரத்தில், பேரவையின் முதற் தெரிவாகக் குறிப்பிடப்பட்ட பேராசிரியர் ச.சிறீசற்குணராஜா ஜனாதிபதியால் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி உள்ளூர் மற்றும் தேசிய பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் கசியத் தொடங்கியிருந்தது. ஆனாலும் பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தினுள் செயற்பட்ட அமைப்புகளும் ஆசிரியர்களும் அந்தச் செய்திகளைப் பகிரங்கமாக மறுத்ததோடு, பேராசிரியர் விக்னேஸ்வரன் தான் துணைவேந்தர் என்று அடித்தும் சொன்னார்கள்.

அந்த நேரத்தில் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நல்லுறவும் காணப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக பேராசிரியர் விக்னேஸ்வரனை ஜனாதிபதி துணைவேந்தராக நியமித்திருப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அறிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களே, ஜனாதிபதியிடம் தமக்கிருந்த ‘உச்சக்கட்ட’ செல்வாக்கைப் பயன்படுத்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவரைப் புறம் தள்ளி – தம்மை அணுகியவருக்காக இன்னொருவரை நியமிக்க வைத்ததாக எல்லாம் பேச்சுக்கள் இருந்தன. அதன் பின் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைவேந்தராகவே பார்க்கப்பட்டார். ஆனால் எந்தவொரு வேளையிலும் அத்தகைய ஒருவராக அவர் செயற்பட்டிருக்கவில்லை.

பேராசிரியர் விக்னேஸ்வரன் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவரது பதவிக்காலத்துக்கான பேரவையை அமைப்பதிலும் அதிக அக்கறை காட்டினார். தன்னுடைய பதவிக்காலத்தில் தனக்கு ‘அலுப்புத்’ தரக் கூடியவர்களை பேரவையிலிருந்து அகற்றி தன்னுடைய நிர்வாகத்தைச் சுமுகமாக கொண்டியக்கும் நோக்கில், பதவி வழி உறுப்பினர்கள் 14 பேர் போக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் உறுப்பினர்களை முன் மொழிவதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவு தேவைப்பட்டதுடன் அரச தலைமை மத்தியிலும் பல்கலைக்கழக நிர்வாக இயந்திரம் கூட்டமைப்புக்குள் இருப்பதான ஒரு மாயை இருந்து வந்தது.



முன்னைய காலங்களில் பதவி வகித்த துணைவேந்தர்கள் நேரடியாக கட்சி சார்ந்து செயற்பட்ட போதிலும் பேராசிரியர் விக்னேஸ்வரன் அவ்வாறு செயற்படவில்லை.

பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவிக்கு வந்த காலத்தில், இராணுவ கெடுபிடிகள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தில் குறைந்திருந்ததனால் பல்கலைக்கழக சமூகம் தமிழ்த் தேசியம் சார்ந்த செயற்பாடுகளை – நினைவு நாள்களைத் தடையின்றிக் கொண்டாடுவதற்கு வசதியாக இருந்தது. நல்லாட்சி என்ற முகத்தைக் காட்டிய அரசும் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் எதனிலும் தலையிடவில்லை.

பல்கலைக்கழக சமூகம் என்ற அடையாளத்தோடு முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான நிகழ்வுகளில் அழைப்பை மறுக்க முடியாத நிலையில் துணைவேந்தர் பிரதான பங்கெடுக்க வைக்கப்பட்டார். இதுவே அவருக்கு ‘ஆப்பு’ வைப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகிவிட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் விக்னேஸ்வரனை அப்புறப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் உள்ளிருந்து கிடைத்த பல ‘மொட்டைக் கடிதங்களின்’ அடிப்படையிலும், எழுச்சி நிகழ்வுகள் குறித்துக் கிடைத்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையிலும் பேராசிரியரை அப்புறப்படுத்துவதற்கான முதல் முயற்சி 2017 செப்ரெம்பரில் நடந்தது.