தமிழகத்தில் அரசியல் மாற்றத்தின் கதைநாயகர்கள் : இவர்கள் மூவரும் தான்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 24, 2019

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தின் கதைநாயகர்கள் : இவர்கள் மூவரும் தான்!


ஜெயலலிதா, அதிமுக பின்புலத்தில் இருந்து வந்து டி.டி.வி. தினகரன் "அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்" தொடங்கி ஒரு ஆண்டுதான் ஆகிறது. இன்று தனித்து நின்று 5.27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது அமமுக.

கட்சி தொடங்கி பத்து ஆண்டுகளே ஆன சீமான் தலைமையிலான நாம் தமிழர் 1.1 வாக்கு சதவீதத்தை மட்டுமே கடந்த தேர்தல் வரை வைத்து இருந்தது. அச்சதவீதம் இத்தேர்தலில் 3.86 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கட்சி தொடங்கி 19 மாதங்களில் 3.72 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ளது கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்" கட்சி.

இவர்கள் மூவரும், கூட்டணி அமைக்காமல் தனியே போட்டியிட்டவர்கள். இம்மூன்று கட்சிகளின் வாக்குகளை ஒன்று கூட்டினால் சுமார் 13 சதவீத வாக்குகளை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் மூன்றுபேரில் தினகரனும் சரி கமல்ஹாசனும் சரி நல்ல பண பலம் படைத்தவர்கள். கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர்கூட தனிப்பட்ட முறையில் பண பலம் படைத்தவர்கள். கமல்ஹாசனுக்கு சினிமா, சின்னத்திரை பெரும் நட்சத்திரம் என்பது கூடுதல் பலம்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி என்றிருந்த சினிமா அடுத்தாக கமல் - ரஜினி என்று ரசிகர்களைப் பிரித்துருவாக்கியவர்கள் இவர்கள். கமலின் வாழ்க்கை தனித்துவம் வாய்ந்தது. எளிதில் மக்களிடம் சென்று சேரக்கூடியது.

டி.டி.வி.தினகரனுக்கு, (முன்னாள்) அதிமுகவின் பின்புலம் எனும் நேர்மறை சாதகம் இருந்தாலும் சசிகலா குடும்பம் என்கிற எதிர்மறையான பெயரும் உண்டு. பணம் கொடுத்து வாக்குகளைப் பெற இவர் தயங்கவில்லை.



ஆனால் சீமான் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை. கமல் இந்திய தேசியத்தை முன்வைக்க, சீமான் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தார்.

இதில் முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் முறை பெண் வாக்காளர்கள் ஏராளமானோர் கமல்ஹாசனுக்கு வாக்களித்துள்ளனர். அதே போன்ற இளைஞர்கள் பெரும்பாலானோர் நாம் தமிழர்க்கு வாக்களித்துள்ளனர்.

சீமான் முன்வைத்தது கொள்கை அரசியல், மண் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாட்டு அரசியல். அவரது பேச்சுக்கள் யூ டியூப் சேனல்களில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டன, கேட்கப்பட்டன. தமிழ், தமிழர், தமிழ்நாடு அரசியலை கடுமையான விமர்சனப்பார்வையோடு அவர் முன்வைத்து பரப்புரை மேற்கொண்டார்.

இந்தக் கொள்கைப் பிடிப்பான அரசியல் அணுகுமுறை புரிந்த, ஈர்க்கப்பட்டவர்கள் பலர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். இதே கடுமையான விமர்சனங்கள் இவருக்கு எதிர்ப்பையும் உருவாக்கியது. சீமான் வேட்பாளர்கள் அனைவருமே சாமானியர்கள்.



கமல்ஹாசன் முன்வைத்தது ஆளும் அரசுகளின் செயல்பாடுகள் மீதான விமர்சனம். ஆனால் சீமான் போல துறை ரீதியான மாற்றங்களுக்கான தேர்தல் அறிக்கை, செயல்திட்டங்கள் எதையும் விரிவாக முன்வைக்கவில்லை.

டி.டி.வி.தினகரன் முழுக்க முழுக்க அதிமுகவை குறிவைத்தே பரப்புரை மேற்கொண்டார். இவரது அமமுக, நான்கு தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியைத் தட்டிவிட்டுள்ளது. அங்கே எல்லாம் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஆக, தமிழக வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகப் புரிகிறது.

அந்த மாற்றங்களின் கதைநாயகர்கள்...டி.டி.வி.தினகரன், சீமான், கமல்ஹாசன்.

எதிர்வரும் தேர்தல்களில் இவர்கள் வளர்ச்சி மேலும் முன்னேறியதாகவே இருக்கும், இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து.