அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது, விவாதிப்பது என்று தீர்மானிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, மே 17ஆம் திகதி சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் சில தலைவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலரும் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனும்,
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.