இலங்கையில் தற்போது அதிகமாக ஐ.எஸ், சஹ்ரான் போன்ற வார்த்தைகள்தான் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கையை அதிர வைத்த ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னர் நாளுக்கு புதிய புதிய பூதங்கள் வெளிக்கிழம்புகின்றன.
மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் நாட்டில் எங்கோ ஓர் மூலையில் பலர் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் என கைது செய்யப்பட்ட வண்ணமே உள்ளனர்.
இன்றும்கூட இலங்கை குண்டுவெடிப்புக்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பால்.... கைது செய்யப்பட வேண்டிய முக்கிய புள்ளிககள் யார்? பணம் கொடுத்து ஒரு தீவிரவாத இயக்கத்தை வளர்த்தவர்கள் இருக்க புகைப்படம் எடுத்தவன், அருகில் இருந்து உணவருந்தியவன் என கைது செய்யப்படுவது சிறுபிள்ளைத்தனமாக தோன்றவில்லையா.
தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தனர் என பலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், (உண்மையில் அது குற்றச்சாட்டுக்கள் மாத்திரம்தான் என்று கூறிவிட முடியாது) அவர்களை கைது செய்யமுடியாமைக்கான காரணம் என்ன?
வெளிப்படையாகவே கூறுவதென்றால் இந்த தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என தெரிவிக்கப்படும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கைது கைது செய்யப்பட வேண்டியவரல்லவா?
தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள மையப்பகுதியாக இருக்கும் காத்தான்குடி பகுதியில் தவிர்க்க முடியாத அரசியல் பிரதிநிதியாக இருக்கும் இவர் குற்றம் இழைக்காதவரா?
இவரது அலுவலகத்தில் இருந்து ஆயுதங்கள் சில அண்மையில் மீட்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாத்திரம் வாய்திறந்த இவரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கண்ணோட்டத்தில் எத்தனை காலம் தான் பார்க்கப்போகிறது இந்த சமூகம்.
அடுத்ததாக அமைச்சர் ரிசாட் பதியுதீன், இன்று தீவிரவாதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக ஒரு இளைஞன் கைது செய்யப்படுகின்றார். ஆனால் தீவிரவாதிகளாக இருந்த ஒரு குடும்பத்தினருடனே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அது பல சமூக வலைத்தளங்களிலும் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்படவேண்டியவரல்லவா?
தீவிரவாதி என அறிந்து நான் புகைப்படம் எடுக்கவில்லை, அவர்களின் தொழில் நிமித்தம் என்னை சந்திக்க வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என அமைச்சர் தற்போது சொல்லித்திரிகின்றார்.
அது உண்மையாகவே இருந்தாலும் கூட தீவிரவாதிகள் என அறிந்து அந்த இளைஞனும் நிச்சயமாக புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பில்லை அல்லவா?
அப்போது இங்கு கைது செய்யப்படவேண்டியவர்கள் யார்? இன்று யாழில் பேசிய சுமந்திரன் இந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தொடர்பு உள்ளது எனவும், புலனாய்வுத் துறையினருக்கு கொடுப்பதாக தெரிவித்து குறித்த அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது இங்கு கைது செய்யப்படவேண்டியவர்கள் யார்? தவறு செய்பவர்கள் உயர் மட்டத்தினராக இருக்க கைது செய்யப்படுபவர்கள் அடிமட்ட மக்களா?
இவ்வாறானதொரு பாரிய தாக்குதல் இலங்கையில் நடக்கவுள்ளதாக சர்வதேசம் இலங்கையை எச்சரித்தும், அரசியல் தலைவர்களை எச்சரித்தும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?
அப்போது இங்கு கைது செய்யப்படவேண்டியவர்கள் யார்? தவறு செய்தவர்கள் நாட்டின் தலைவர்களாக இருக்க சாதாரண குடிமகன்கள் சாவை தழுவிக்கொண்டமை எந்த எவ்விதத்தில் நியாயம்