மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத அமைப்பின் வழிநடத்தலில் உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் ஹாசீம் எனப் பொலிஸார் அடையாளம் கண்டனர். அதையடுத்து காத்தான்குடி முழுவதும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது கடந்த ஒரு மாத காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் 63 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காத்தான்குடிப் பொலிஸார் கூறினர்.
இவர்களில் பலர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டனர் என்றும் காத்தான்குடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, காத்தான்குடிப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தரப்பினர் தொடர் சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.