வஹாப் வாத முகவர்களால் இலங்கையில் 3000 இற்கும் அதிகமான இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், குறுகிய அறிவுறுத்தலின்படி ஒன்று சேரக் கூடிய நிலையில் அவர்கள் உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜகிரியவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
சவூதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவின் வஹாப் வாத முகவர்களாக செயற்படும் தெஹிவளையை தலைமையகமாக கொண்ட தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்.
தெஹிவளை, கண்டி, குருணாகல் என பல பகுதிகளில் கிளைகளைக் கொண்ட இந்த தனியார் பல்கலைக்கழகம் 200 முஸ்லிம் இளைஞர்களை பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுடன் செயற்படுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல்கள் இருப்பதுடன், இவருக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஒன்றும் இருக்கிறது.
சவூதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவின் வஹாப் வாத முகவர்களாக இந்தத் தனியார் பல்கலைக்கழகம் செயற்பட்டுள்ளது. கல்வி என்ற பேர்வையில் பல முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாத சிந்தனையுடன் வஹாப் வாதம் புகட்டப்பட்டு பல உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 200 இளைஞர்களும் போலியான பெயர்களில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தகவல்கள் உள்ளன.
அத்துடன், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உதவிய பொறியியலாளர்கள் இருவரும் காத்தான்குடியிலிருந்து அழைத்து வரப்பட்டு குறித்த பல்கலைக்கழத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
வஹாப் வாத முகவர்களால் இலங்கையில் 3000 இற்கும் அதிகமான இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறுகிய அறிவுறுத்தலில் ஒன்று சேரக்கூடிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாரை அரசாங்கம் உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்