உலகளாவிய ரீதியில் சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
8 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் சர்வதேச உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு ஏனைய நாடுகளில் கொண்டாட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும் இலங்கையில் தற்போது நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வருடம் உழைப்பாளர்கள் தினத்தைக் கொண்டாடுவதை அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இரத்து செய்துள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கை மன்றக்கல்லூரியில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் மே தினத்தை கொண்டாடவுள்ளது.
மேலும் இன்றைய மே தினத்தை அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வாக நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
இதேவேளை சர்வதேச ரீதியில் 58 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் தரவுகளூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 71 வீதமானவர்கள் ஆண்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் 50.2 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதுடன், அவர்களில் 32.4 வீதமானவர்கள் பெண்கள் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.