ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணரும், சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து ஒடுக்கப்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் உலகின் வேறும் நாடுகளில் கிளைகளை நிறுவி இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினமன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சமப்வங்களுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இயக்கமொன்றுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரையும் கடும்போக்குவாததத்திற்குள் மூழ்கடிக்கச் செய்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும், ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாதிகளைக் கொண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளினால் தாக்குதல்களை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் கட்டமைப்பிற்கு அனைவரும் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டிய அவசியப்பாடு கிடையாது என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இதற்கு முன்னதாக எவ்வித முரண்பாட்டு நிலைமைகளும் உருவாகியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்திருந்தால் பௌத்த விஹாரைகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாட்டவரை இலக்கு வைத்தே இவ்வாறு ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.