தாய்க்கு தற்கொலைதாரி அனுப்பிய கடைசி தகவல்!! புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

தாய்க்கு தற்கொலைதாரி அனுப்பிய கடைசி தகவல்!! புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்



நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தாக்குதலாளிகள் எப்படி தயாரானார்கள், அவர்களின் பின்னணி பற்றிய பல தகவல்கள் தினம்தினம் புலன் விசாரணையில் வெளியாக்கி் கொண்டிருக்கிறது.

நேற்று வெளியிட்ட முதல் பாகத்தில் கொழும்பு தேவாலய தாக்குதல் பற்றிய விபரங்களை குறிப்பிட்டிருந்தோம்.

இந்த பாகத்தில் ஹோட்டல்கள் மீதான தாக்குதல் தகவல்களை தருகிறோம்.



சங்கரில்லா ஹோட்டல் சரிக்கமுல்ல வீடு

சங்கரில்லா ஹோட்டலில் இரண்டு மனித வெடிகுண்டுகள் தாக்குதல் நடத்தினர். தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹமட் கஷீம் மொஹமட் சஹ்ரான் (ஐ.எஸ் பெயர் அபு உவைட்), மொஹம் அசாம் மொஹமட் முபாரக் (அபு அல்வர்) ஆகியேரே தாக்குதல் நடத்தினர்.

மொஹமட் முபாரக் கொழும்பு 12 இல் வசித்தவர். வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். அவரும் சிறிய வர்த்தகத்தை நடத்தி வந்தார். அவரது கல்வி தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

“கடந்த 4 மாதங்களாக முபாரக் பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது“ என அவரது தாய் கூறுகிறார். ஆறு மாதங்களிற்கு முன்னதாக வெளிநாடு போவதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளிநாடு போவதாக கூறி, இரகசிய வாழ்க்கை வாழ்ந்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

20ம் திகதி சஹ்ரானும், முபாரக்கும் சங்கரில்லா ஹோட்டலிற்கு சென்றனர். சிறிய வாகனமொன்றில் வந்தனர். முபாரக் பாணந்துறை வீட்டிலிருந்தும், சஹ்ரான் மவுண்ட்லவனியா வீட்டிலிருந்தும் வந்தனர். ஹோட்டலின் ஆறாவது மாடியில் அவர்களிற்கு அறை ஒதுக்கப்பட்டது.

21ம் திகதி காலை மூன்றாவது மாடி உணவகத்தில் அதிக ஆட்கள் குழுமியிருந்தபோது, இரண்டு இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடித்து சிதறினர்.

பாணந்துறை வீடு

உடனடியாக களத்தில் இறங்கிய புலனாய்வுத்துறை, சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் வந்திறங்கிய வாகனத்தை அடையாளம் கண்டனர். இதன்படி சாரதியை வெள்ளவத்தை, இராமகிருஷ்ணமிசன் வீதியில் கைது செய்தனர்.

வாகன வாடகை நிறுவனமொன்றில் அவர் சாரதியாக பணிபுரிந்தார். பாணந்துறையிலிருந்து ஒருவர் தன்னுடன் வந்ததாக சாரதி விசாரணையில் தெரிவித்தார். புகைப்படங்களின் மூலம், அந்த நபர் முபாரக் என்பதை உறுதிசெய்யப்பட்டது.



சாரதியின் தகவலின் அடிப்படையில், முபாரக் தங்கியிருந்த பாணந்துறை சரிக்கமுல்ல வீட்டிற்கு பொலிசாரும், புலனாய்வாளர்களும் சென்றனர்.

அதுவும் வாடகைக்கு பெறப்பட்ட வீடு. மாதாந்தம் 45,000 ரூபா வாடகை. இணையத்தளம் ஊடாக, பெப்ரவரி 19ம் திகதி அந்த வீட்டை வாடகைக்கு பெற்றார்.

ஒரு வருடத்திற்கான வாடகை பணத்தை முன்கூட்டியே செலுத்தினார். கட்டானவில் வாடகைக்கு பெற்ற வீடும் இதே காலப்பகுதியிலேயே பெறப்பட்டது.

தெஹிவளையை சேர்ந்த ஜமீல் என்பவரும் முபாரக்குடன் வாடகைக்கு வீடு எடுக்கும் போது வந்திருந்தார்.



எனினும், முபாரக்கே ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார். எனினும், இரண்டு குடும்பங்கள் வீட்டில் வசிப்பார்கள் என உரிமையாளருக்கு கூறப்பட்டது.

இரண்டு குடும்பங்கள் அங்கு வசிப்பார்கள் என கூறப்பட்டாலும், பெரும்பாலான சமயங்களில் அப்படி யாரும் இருக்கவில்லை. சில சமயங்களில் மட்டும் குழந்தைகள், பெண்கள் தங்கினார்கள்.

அந்த வீடு தௌஹீத் ஜமா அத் அமைப்பினரின் இரகசிய தங்குமிடமாகவே பாவிக்கப்பட்டு வந்துள்ளது. கொழும்பில் வெடித்த குண்டுகள் பல இங்குதான் தயாரிக்கப்பட்டு அல்லது இங்கு பாதுகாப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

குண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான வலுவான ஆதாரங்களை அங்கு பொலிசார் கண்டுபிடித்தனர்.

கிங்ஸ்பெரி ஹோட்டல் தாக்குதல்

இலங்கையின் முன்னணி வாசனை திரவிய வர்த்தகர் அல்ஹாஜ் முஹமட் இப்ராஹிம் யூசுப் ஹாஜியார். சதொச நிறுவனத்திற்கான முக்கிய விநியோகஸ்தரும் அவர்தான். அமைச்சர் ரிசாட் பதியுதீன், மஹிந்த ராஜபக்ச தரப்பு, ஜேவிபி என பல அரசியல் தரப்புக்களுடன் நெருக்கமானவர்.

இப்ராஹிம் ஹாஜியாரின் ஐந்தாவது மகன் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் (31) கிங்ஸ்பரி ஹோட்டலை இலக்கு வைத்தார். அவரது மனைவி கர்ப்பவதியாக இருந்தார். மூன்று குழந்தைகள் இருந்தன. தெமட்டஹொட, மகாவில்ல பகுதியில் வசித்தார். மூன்றடுக்கு வீட்டிலேயே இப்ராஹிமும், சில மகன்களும் வசித்தனர். அனைவரும் தந்தையின் வணிகத்தை கவனித்து வந்தனர்.



இல்ஹாமின் மனைவி, இல்ஹாமை விட ஆழ்ந்த மதப்பற்றும், தீவிர எண்ணமும் உடையவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அவர் முன்னரே தெரிந்து வைத்திருந்தார் என புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.

20ம் திகதி இரவை கிங்ஸ்பெரி ஹோட்டலில் கழித்த இல்ஹாம், 21ம் திகதி காலையில் 15 கிலோகிராம் வெடிகுண்டை ஹோட்டல் உணவகத்தில் வெடிக்க வைத்தார். எனினும், அவரது அடையாள அட்டையின் மூலம் தெமட்டகொட, மகாவில்ல பூங்காவிற்கு அருகில் அவர்களது வீடு இருப்பதை அறிந்து, அங்கு சென்றனர்.

எனினும், அங்கு ஒரு மனித வெடிகுண்டு தங்கியிருப்பதை பொலிசார் அறிந்திருக்கவில்லை. கிங்ஸ்பெரி தாக்குதல் சந்தேகநபருக்கும் அவர்களிற்கும் என்ன தொடர்பு என்பதை அறியவே சென்றனர்.

அவர்கள் வீட்டிற்கு சென்று விசாரணைக்கு தயாரான போது, இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜவ்ருபி (25) குண்டை வெடிக்க வைத்தார்.

அவர் வெடிக்க வைத்தது 20 கிலோகிராம் நிறையுடைய குண்டு. கர்ப்பிணி பெண்ணான பாத்திமாவும், மூன்று குழந்தைகளும் அடையாளம் தெரியாத விதமாக சிதறினார்கள். கிங்ஸ்பெரி குண்டுவெடிப்பிற்கு ஒரு மணித்தியாலம் தாமதமாக இந்த வெடிப்பு நடந்தது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பொலிசாரும் உயரிழந்தனர்.

இதையடுத்து அந்த வீட்டில் விசேட கவனம் திரும்ப, சிஐடியினர், விசேட பொலிஸ் பிரிவினர் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களது இலக்கு இப்ராஹிம் ஹாஜியாரின் இளைய மகன் இஸ்மாயில் அஹமட் இப்ராஜிம்.



ஐஎஸ் வெளியிட்ட வீடியோவில் பெண் என கருதத்தக்க ஒருவரும் இருந்தார். எனினும், ஐஎஸ் வெளியிட்ட குறிப்பின்படி தெமட்டகொடவில் அபு அப்துல்லா என்பவர் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழப்பம் என் ஏற்பட்டது என்பதையும் பொலிசார் ஆராய்கிறார்கள். அந்த இடத்திலிருந்து இன்னொரு தற்கொலையாளி தப்பித்தாரா? அது ஹாஜியாரின் மகனா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இதேவேளை, குண்டுவெடிப்பை தொடர்ந்து, ஹாஜியார், அவரது இன்னொரு மகன் இஜாஸ் அஹமட் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கைதாகினர்.

விசாரணையில், மார்ச் 29ம் திகதிக்கு முன்னரே தற்கொலைதாரியின் சொத்துக்கள் சில நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களிற்கு மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சினமன் கார்டன் ஹோட்டல் தாக்குதல்

இப்ராஹிம் ஹாஜியாரின் மகன் இல்ஷாப் அஹமது இந்த தாக்குதலை நடத்தினார். ஐ.எஸ் இவருக்கு வைத்த பெயர் அபு முக்தார்.

வெல்லம்பிட்டியவில் பெரிய செப்பு தொழிற்சாலையொன்றை நடத்தி வந்தார். இராணுவத்திலிருந்து ரவை கோதுகளை பெறும் ஒப்பந்தத்தை செய்திருந்தார். பல அரசியல் புள்ளிகளுடன் நெருக்கமாக இருந்தார். தந்தையுடன் இணைந்தும், தனித்தும் நிறுவனங்களை நடத்தினார். Ishaana Spice Exports என்ற நிறுவனத்தின் மூலம் பாகிஸ்தான், டுபாய், இந்தியா, அமெரிக்காவிற்கு வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்தார். சிறந்த ஏற்றுமதி விருதையும் பெற்றிருக்கிறார்.



சினமன்கார்டன் ஹோட்டலின் 8வது தளத்தில் 21ம் இலக்க அறையில் தங்கியிருந்தார். 21ம் திகதி காலை 8.46 மணிக்கு உணவகத்தில் வெளிநாட்டவர்கள் மத்தியில் குண்டை வெடிக்க வைத்தார்.

இல்ஷாப்பின் மனைவி அக்ஷானா அல்லம்டின் கூறுகையில்- 18ம் திகதி சாம்பியாவிற்கான பயணம் செய்வதாக கூறிவிட்டு சென்றார். எனது இரண்டு தோள்களையும் தொட்டு, நீங்கள் வலுவாக இருக்க வேண்டுமென கூறினார். அது விசித்திரமாக இருந்தது. ஆனால் அவர் இப்படி செய்வார் என நினைக்கவில்லை. தெரிந்திருந்தால் அவரை தடுத்திருப்பேன் என்றார்.

வர்த்தக குடும்பத்தின் தெமட்டகொட வீடு

ஆனால் தாக்குதல் அன்று காலை 7.30 மணிக்கு தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

கண்டியில் பிரபல பாடசாலையொன்றில் படித்த இல்ஷாப், பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வைத்திருந்தார்.

தாக்குதலிற்கு சற்று முன்னதாக, தனது தாயாரிற்கு குரல்வழி குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார். “அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மதத்திற்காக தற்கொலை செய்து கொள்ள போகிறேன்“ என குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் 29ம் திகதியே தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி, நான்கு பிள்ளைகளின் பெயரில் அவர் மாற்றி விட்டார்.