இலங்கை தாக்குதலின் போது லிப்டில் இருந்ததால், சுற்றுலா வந்திருந்த அவுஸ்திரேலிய குடும்பத்தினர் உயிர்தப்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kim Wright என்பவர் சிறுவயதிலிருந்தே பலமுறை இலங்கைக்கு சுற்றுலா வந்து சென்றுள்ளார்.
இலங்கை தான் மிகவும் பாதுகாப்பான நாடு என கூறும் அவர், இந்த முறை தன்னுடைய குடும்பத்துடன் வந்து சின்னமோன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
அந்த சமயத்தில் தான் ஹோட்டலில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் Kim Wright குடும்பத்தினர் மட்டும் அதிர்ஷ்டவசமாக இதிலிருந்து உயிர்தப்பியுள்ளனர்.
இதுகுறித்து அவருடைய மனைவி கூறுகையில், நாங்கள் இலங்கைக்கு வரும் சமயங்களில் எல்லாம் இந்த ஹோட்டலில் தான் தங்கியிருப்போம். தற்போது நடந்தவை பற்றி பேசுவதற்கு எங்களுக்கு வார்த்தைகள் வரவில்லை.
அன்றைய தினம் நாங்கள் அனைவரும் நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக புறப்பட்டோம். எங்களுக்கு இரண்டு துண்டுகளை எடுத்துவருமாறு அங்கு வேலை செய்த பையனிடம் கூறியிருந்தோம்.
பக்கத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. மேளதாளங்கள் என சத்தம் அதிகமாக இருந்தது.
கீழ்தளத்திற்கு செல்வதற்காக நாங்கள் அனைவரும் லிப்டில் ஏறினோம். அப்போது ஏதோ ஒன்று பலத்த சத்தத்துடன் தரையில் விழுவதை போன்று இருந்தது.
லிப்ட் முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது. நாங்கள் வெளியில் வந்ததும் எங்களிடம் ஓடிவந்த ஒருவர் இங்கு யாருக்கும் எதுவும் நடக்கவில்லையே என கேட்டதோடு, மேல் தளம் தரையில் சரிந்துவிட்டதாக கூறிவிட்டு கிளம்பினார்.
அப்போது தான் நாங்கள் துண்டு எடுத்து வருமாறு கூறிய நபர், ரத்தக்காயங்களுடன் அங்கு கிடப்பதை பார்த்தோம். பலரும் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர்.
சுவர் முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. கண்களில் நீருடன் இரண்டு சிறுவர்கள் அழுதுகொண்டே ஓடினார்கள். அங்கிருந்த ஊழியர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பலரையும் புத்துயிர் பெற வைக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.
தற்கொலை படையினர் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தியதாக எங்களிடம் மேலாளர் வந்து தகவல் தெரிவித்தார். அதன்பின்னர் தான் எங்களுக்கு தாக்குதல் நடந்தது பற்றி தெரியவந்தது.
நாங்கள் இன்னும் இலங்கையில் தான் தங்கியிருக்கிறோம். அடுத்த வாரம் தான் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.