அமெரிக்காவில் தான் வளர்த்த செல்லப்பிராணி தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 14, 2019

அமெரிக்காவில் தான் வளர்த்த செல்லப்பிராணி தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்!

அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இவர் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.


அந்த வகையில், ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.

இந்த ரக பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மார்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார்.