அஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 24, 2019

அஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்!



ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் மத வெறியாலேயே கொடூரத் தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே இன்று வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தாக்குதல்களின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவருடன் தற்கொலை தாக்குதல் நடத்திய மேலும் இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகள், சம்பவங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரிகளின் உறவுகளுடனும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நேரடித் தொடப்புகளை வைத்திருந்துள்ளனர்.

தேசிய புலனாய்வுத் தகவல்களும் இதனைத் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களுக்குத் தெரியாமல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, இவர்கள் நால்வரினதும் பதவிகளைப் பறித்து இவர்களை உடனடியாக அரசு கைதுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மஹிந்த அணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகத்திடம் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

தௌஹீத் ஜமாஅத் அமைப்பினருடனும் அவர்களின் மதவெறித் தாக்குதல்களுக்குத் துணைபோனவர்களுடனும் நேரடித் தொடர்புகளை வைத்திருந்த ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகிய நான்கு அரசியல்வாதிகளையும் உடன் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்கவேண்டும். இல்லையெனில், ஜனாதிபதியும், பிரதமருமே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம்கள் சிலர் பிரபல வர்த்தர்கர்கள் என்ற போர்வையில் நாட்டை நாசமாக்கியுள்ளார்கள். அப்பாவிக் கிறிஸ்தவ மக்களைக் கொன்றழித்துள்ளார்கள். இந்த நாசகார வேலைகளுக்குத் துணைபோனவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக்கூடாது.

மஹிந்த ஆட்சியில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர்தான் நாட்டுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் ஊடுருவல் இடம்பெற்றுள்ளதுடன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் அடாவடியும் தலைவிரித்தாடியுள்ளது. இது குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் மௌனத்தைக் கலைத்து உண்மை நிலவரத்தை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்கள் தொடர்பில் தேசிய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தமை எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்பானவர்கள் இதற்குப் பதில் கூறியே ஆகவேண்டும் என தெரிவிதிருந்தார்.