தற்கொலைதாரியை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

தற்கொலைதாரியை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்

இலங்கையில் இன்று தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என தனது பெயரை அடையாளப்படுத்திய சந்தேக நபரொருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிணை கொண்டே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதனை தற்கொலை தாரியொருவர் கொண்டுவந்து தாக்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பில் இருந்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் வந்த நபர் ஒருவரை சந்தேகம் கொண்ட தேவாலய ஊழியர்கள் அவரை வெளியேற்றிய நிலையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரழந்துள்ளதுடன் 69 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதல்தாரி என நம்பப்படும் ஒருவரின் சடலங்களும் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெருமளவானோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலநறுவையில் இருந்தும் விசேட வைத்திய அணியினர் சிகிச்சை வழங்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பில் குறித்த சம்பவத்தின் போது தேவாலயத்தில் இருந்தவர்களின் வாக்கு மூலங்களை பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்று காலை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் மட்டக்களப்பில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் உட்பட முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்; படையினர் மற்றும் பொலிஸார் விசேட ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவினை வழங்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு மட்டக்களப்பில் நடைபெறவிருந்த பொது நிகழ்வுகள் இடைநிறுத்துமாறும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேநேரம் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இவ்வாறானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.