குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாசிம் எப்படி காத்தான்குடி முஸ்லிம்களுக்கும் ஒரு நரகத்து முள்ளாக இருந்தார் என்பதை இக்கட்டுரை தெளிவாக சொல்கின்றது.
இக்கட்டுரை Sri Lanka Forward With Jeeran என்ற அமைப்பின் நிறுவுனரான Muheed Jeeran என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வரிக்கு வரி என்னால் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு Muheed Jeeran என்பவரே முழுப்பொறுப்பாகும்.
(இனத்துவேஷ கருத்துக்கள் வரவேற்கப்படமாட்டாது என்பதுடன், அவை உடனே அழிக்கப்படும்)
ஈஸ்ட்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரி என்று நம்பப்படுபவரும், தற்கொலைதாரிகளில் ஒருவரும் ஆன சஹ்ரான் ஹாஷிம் (ஜமயித்துல்லாஹ் மதராஸாவில் கல்வி கற்றவர் ஆனால் மௌலவி அல்ல)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு அருகில் உள்ள காத்தான்குடியை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவரே இந்த சஹ்ரான் ஹாஷிம். அவரது சகோதரர் சாய்னி ஹாஷிம் அங்கு ஒரு மௌலவியாக உள்ளார்.
அவர் காத்தான்குடி 4ம் வட்டாரத்தில் உள்ள ஜமயத்துல்லாஹ் மதரஸாவில் இஸ்லாம் மார்க்க கற்கை நெறியை தொடர்த்துகொண்டிருந்தார்.
அவரின் கற்கை நெறியின் இறுதிக்காலத்தில் அங்குள்ள கற்கை நெறிகளில் முரண்பட்டதோடல்லாமல் மற்றைய மாணவர்களின் கவனங்களையும் கலைப்பதில் ஈடுபட்டதால், அவர் ஜமயத்துல்லாஹ் மதரஸாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த மதரஸாவில் இருந்து வெளியேற்றப்பட்டபின் அவர் இளைஞர்களுக்கான தனது சொந்த கற்பித்தலையும் போதனையையும் ஆரம்பித்தார்.
அவரின் போதனைகள் ஜமயத்துல்லாஹ் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். அவர் ஒரு கெட்டிக்காரனாகவும் அரபு மொழியில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவராகவும் இருந்ததால் அப்பிரதேச இளைஞர்களை இலகுவாக கவர்ந்தார்.
அவரின் அதிதீவிர அடிப்படைவாத போதனைகள் காரணமாக அவரும் அவரது சகபாடிகளும் சேர்ந்து தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Tawheed Jamath - NTJ) என்ற அமைப்பை நிறுவினார்கள்.
இளைஞர்கள் கிராமத்தவர்கள் மற்றும் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கும் இடையில் அவர்கள் மிகவும் பிரபலமடைந்ததால் தமக்கென அவர்கள் ஒரு பள்ளிவாசலை கட்ட முடிவெடுத்தார்கள்.
நிதி சேகரித்து ஒரு காணியையும் வாங்கினார்கள். பள்ளிவாசலை சிறிய கொட்டிலாக ஆரம்பித்து பின்பு பெரிதாக கட்டி முடித்தார்கள். இந்த பள்ளி வாசல் காத்தான்குடி 3ம் வட்டாரத்தில் Tharul Athar Athaviya என்ற பெயரில் இயங்குகின்றது.
ஒருமுறை காத்தான்குடியை சேர்ந்தவரும் எகிப்தின் அல் அஸார் பல்கலைக்கழத்துடன் தொடர்புடையவரும் ஆன கலாநிதி அஷ்ரப் அவர்களுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டார்.
இது 3 வருடங்களுக்கு முன் அலியார் சந்தியிலுள்ள அப்துர் ரவூப் பள்ளிவாசலில் நடந்தது. பெருந்தொகையான மக்கள் முன்னிலையில் பிற்பகல் 3மணியில் இருந்து அதிகாலை 1 மணிவரை நடந்த இந்த விவாதத்தில் சஹ்ரான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரின் பேச்சு வன்மையும் பாங்கும் பலரை அவரின் பால் திருப்பியது.
காத்தான்குடி 6ம் வட்டாரத்தில் உள்ள பதுரியா பள்ளிவாசல் அதனை பின்பற்றுவோருக்கு தர்கா அப்துர் ரவூப் மிஸ்பாஹி தலைமையில் கற்பித்து வந்தது.
அவர்களின் கற்பித்தலை சஹ்ரான் கடுமையாக எதிர்த்தார். 3 வருடங்களுக்கு முன் வேண்டுமென்றே பதுரியா பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு ஒரு மேடைக் கூட்டத்தை அரங்கேற்றி அந்த மார்க்கத்தை பின்பற்றுவோரை சண்டைக்கு இழுத்தார்.
அதுமட்டுமல்லாமல் வாள்கள் காம்புகள் என்பவற்றை கொண்டுவந்து மேடையில் மறைத்து வைத்திருந்து சண்டைக்கு வந்தவர்களை தாக்கி காயப்படுத்தினார். CCTV பதிவுகளின் படி அவர் ஆயுதம் கொண்டுவந்து வைத்திருந்து வந்தவர்களை தாக்கியது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட கிராமத்தவர்கள் காத்தான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் தேடத்துவங்கியதும் அவர் தலைமறைவானார். அவரின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு சஹ்ரானின் இருப்பிடம் தொடர்பாக விசாரிக்கப்பட்டனர். 3 வருடங்களுக்கு முன் இது நடந்தபோது அவருக்கு 39 வயது.
அவர் மாலைதீவுக்கு தப்பியோடிவிட்டதாகவே கிராமத்தவர்கள் நம்பினார்கள். அங்கிருந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் சிரியாவிலும் மற்றைய நாடுகளிலும் நடக்கும் ISIS இன் நடவடிக்கைகள் பற்றி தமிழில் உடனுக்குடன் எழுதிக்கொண்டிருந்தார்.
அவரின் பேச்சுக்களை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக்கொண்டுமிருந்தார். இப்பொழுது செய்தி ஊடகங்களில் காட்டப்படும் அவரின் படம் பழையது என்று கிராமத்தவர்கள் சொல்கின்றனர்.
அவர் உண்மையில் மாலைதீவுக்குத்தான் சென்று மறைந்திருந்தாரா என்பதை கிராமத்தவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. நெருப்பில்லாமல் புகை வராது!
அவரைப்பற்றி அங்கு நான் சேகரித்த தகவல்களின் படி, அவரைப்பற்றியும், அவருக்கு தீவிரவாதத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு பற்றியும் காத்தான்குடியில் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது.
அவர் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத சிந்தனைகளை எழுதியும், பரப்பியும் வந்ததால் புலனாய்வு அமைப்புக்களுக்கு இவரின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள் பற்றி நன்றாக தெரிந்திருந்திருக்கும் என்பது வெளிப்படை.
எப்படி அவர் புலனாய்வுத்துறைகளின் கண்களை கட்டிவிட்டு இந்த பெரிய அழிவை செய்யமுடிந்தது என்பதை இப்பொழுது சட்டங்களுக்கு பொறுப்பானவர்கள் தான் மக்களுக்கு சொல்லவேண்டும். ஒருவேளை அவர்களுக்கும் அவரை பின்தொடரமுடியவில்லையா?