சிறி லங்காவின் ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்கும் குற்ற வியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் இரகசிய நகர்வை மேற்கொண்டிருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை எம்.பிக்களின் இது தொடர்பிலான இரண்டு சுற்று பேச்சு ஏற்கனவே நடந்துள்ளது.
அடுத்தடுத்த மாதங்களில் அதிரடியான சர்ச்சைக்குரிய முடிவுகளை ஜனாதிபதி மைத்திரி எடுக்கலாமெனக் கருதப்படுவதால் இப்படியான நகர்வை இரகசியமாக மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள், ஏற்கனவே வரவு – செலவு திட்ட இறுதி வாக்களிப்பு விவகாரத்தில் மைத்திரியுடன் அதிருப்தியுடன் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவைப் பெறவும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்து அறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் சினத்துடன் இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. பிரதமர் ரணில் இந்த நடவடிக்கையின் பின்னால் இருப்பதாக கருதும் ஜனாதிபதி, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சில செயற்பாடுகளை முன் னெடுக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
வெற்றிடமாகவுள்ள பிரதம நீதியரசர் மற்றும் கணக்காளர் நாயகம் ஆகிய பதவிகளுக்குப் புதியவர்களை நியமித்து அதனூடாகச் சில காய்நகர்த்தல்களை மைத்திரி முன்னெடுக்கலாமெனக் கருதும் ஐக்கிய தேசியக் கட்சி, அதற்கு ஒரு அழுத்தத்தை வழங்கவே இந்த நடவடிக்கையை திரை மறைவில் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிந்தது.