தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் காணப்பட்ட தங்கங்கள், புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஈழம் வங்கி இந்த பகுதியில் நடாத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, குறித்த பகுதியில் நடாத்தி செல்லப்பட்ட ஈழம் வங்கியின் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியை கொண்ட தங்கங்கள் இந்த இடத்தில் குழித் தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி ஒருவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியிலேயே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவிற்கு அமையவே, இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.