மாவனல்லை உட்படப் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தித் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரின் மனைவி குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை தெல்கஹகோட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய முஹம்மட் இப்ராஹீம் சாதிக் என்ற பிரதான சந்தேக நபரே இவ்வாறு தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் தலைமறைவாகி இருந்தார்.
பின்னர் சந்தேக நபரின் புத்தளம் வணாதவில்லு பிரதேசத்திலிருந்த காணி ஒன்றும் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து பெரும் அளவிலான வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் குறித்த சந்தேக நபருக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
சுமார் 5 மாதங்கள் தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் தனது மனைவி மற்றும் பிள்ளையை மாவனல்லை நகரில் விட்டுவிட்டு மீண்டும் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் சந்தேக நபரின் மனைவி மாவனல்லை முறுத்தவேல பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்குக் குறித்த பெண்ணின் பெற்றோர் அவர்களை பாரமேற்க மறுத்துள்ளதுடன், பொலிஸாருக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வீட்டில் வைத்தே முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது 24 வயதுடைய பாத்திமா சாஹிதா மற்றும் அவரது பிள்ளை, சந்தேகநபரினால் கண்கள் கட்டப்பட்டு, மாவனல்லை நகரிற்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதேவேளை சந்தேக நபர் மனைவியை அச்சுறுத்தி போலியான தேசிய அடையாள அட்டை ஒன்றைப் பெற்றுக் கொடுத்து வீட்டுக்குப் போகுமாறு கூறியதாகவும், தான் தொடர்பில் யாருக்காவது தகவல் வழங்கினால் கொலை செய்வதாக, கணவர் மிரட்டியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் பாத்திமா சாஹிதாவை பொலிஸார் பொறுப்பேற்றதுடன், குறித்த வீடும் முழுமையாகச் சோதனை இடப்பட்டது. என்றாலும் அங்கிருந்து எந்தவித சந்தேகத்திற்கு இடமான பொருட்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மாவனல்லை ஹிங்குல பஹல கடுகன்னாவ பிரதேசத்தில் சில புத்த சிலைகளைத் தாக்கி சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சில நபர்களைப் பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 05 பேர் கைது செய்யப்பட்டதுடன், பிரதான சந்தேக நபர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி தற்போது குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.