ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு வெடிகுண்டு மூலப்பொருட்களை விற்பனை செய்த இந்தியாவின் 7 நிறுவனங்கள் உள்ளிட்ட 20 நாடுகள் குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், எந்தவகையான மூலப்பொருட்கள், ரசாயனம் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க மேலும் காலதாமதம் ஏற்படும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சர்வதேச நாடுகளில் உள்ள மொத்தம் 51 நிறுவனங்கள் வெடிகுண்டு மூலப்பொருட்களை விற்பனை செய்து வருவது இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
இதில் துருக்கி, இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சுமார் 700 வகையான மூலப்பொருட்களை ஐ.எஸ் தீவிரவாத குழுவுக்கு விற்பனை செய்துள்ளன.
துருக்கியில் இருந்து மட்டும் 13 நிறுவனங்கள் மூலப்பொருட்களை அந்த அமைப்புக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்து இந்தியாவில் உள்ள 7 நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 20 மாதங்களில் முடிக்கப்பட்ட இந்த ஆய்வானது 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள் ஏழும் அரசின் உரிமம் பெற்றே குறித்த மூலப்பொருட்களை தயார் செய்து ஏற்றுமதி செய்துள்ளன.
மட்டுமின்றி அரசு அனுமதியுடனே துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு இந்த 7 நிறுவனங்களும் ஏற்றுமதி செய்துள்ளன.
வெடிகுண்டுகளை இயக்க ஐ.எஸ் தீவிரவாத குழுவானது Nokia 105 என்ற மொபைலையே பெருவாரியாக பயன்படுத்துகின்றனர்.
வெடிகுண்டு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ருமேனியா, ரஷ்யா, நெதர்லாந்து, சீனா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
மட்டுமின்றி ஈராக் நகரங்களான அல் ராபியா, கிர்குக், மோசூல் மற்றும் டிக்ரிட் மற்றும் சிரிய நகரான கோபனி ஆகிய பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் சேகரித்த மூலப்பொருட்களில் இருந்தே அவை எந்த நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பதை கண்டறிந்துள்ளனர்.
தற்போது இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதால் இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.