இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலின் முக்கிய குற்றவாளியின் உறவினர்கள் 18 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது சகோதரி அச்சம் தெரிவித்துள்ளார்.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் மாயமானதாக கூறும் அவர், அவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதலில் 250-கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
சுமார் 500 பேர் காயங்களுடன் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு கிழமை கடந்த நிலையிலும், நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
மேலும், இதுபோன்ற தாக்குதல் வரும் நாட்களில் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சமும் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான ஜஹரான் ஹாஷிமின் சகோதரி ஹாஷிம் மதானியா சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கையில், தமது சகோதரரின் உடலை, பொலிசார் காட்டிய புகைப்படம் மூலம் அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் குடும்பத்தில் உள்ள ஐவர் இன்னமும் மாயமாயுள்ளதாக கூறும் மதானியா, அவர்களில் மூவர் தமது சகோதரர்கள் எனவும் ஒருவர் தமது தந்தை எனவும் எஞ்சிய ஒருவர் சகோதரியின் கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.