பானி புயல் மேலும் வலுவடைந்தள்ளது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 30, 2019

பானி புயல் மேலும் வலுவடைந்தள்ளது!



தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது

புதன்கிழமை மாலை (மே 1) வடதமிழகம்-தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில் 300 கி.மீ. தொலைவு வரை நகர்ந்து, அதன்பிறகு, வடக்கு, வடமேற்கு திசையில் ஒடிஸா கடற்பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் பாலசந்திரன் தெரிவிக்கையில் ஃபானி புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னைக்கு 575 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. குமரி, மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோர கடற்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இன்றும், நாளையும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

கடற் கொந்தளிப்பு

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் வடமேற்கு திசையை நோக்கி மணித்தியாலத்துக்கு 35-45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசப்படும்.

காற்றின் வேகம் 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலி தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் சிலாபம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலுமான கரையோரத்துக்கு அப்பால் ஆழமான கடற்பிரதேசத்தில் அடிக்கடி மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரையிலான காற்றை எதிர்பார்க்கமுடியும்.

இந்த பிரதேசத்தில் அடிக்கடி கொந்தளிப்பாக காணப்படும். வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் மணித்தியாலத்துக்கு 120-130 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும். அடிக்கடி காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 145 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்த பிரதேசத்தில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும்.