நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் வெள்ளவத்தை, தம்புள்ளை, வெல்லம்பிட்டிய, ஹன்சியாஹேன, கம்பளை, கட்டுகஸ்தோட்டை, வத்தளை – எந்தரமுல்ல ஆகிய பகுதிகளில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் ஆரம்பத்தில் 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவர்களில் ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியான இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் பணிபுரிந்த 9 பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரும் நேற்று இரவு லிந்துல இராணிவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய குறித்த பெண் காசிம் நஜீமா என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.