நில விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதமர் தலைமையிலான அரசும், ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கியிருந்த போதும், அதையெல்லாம் உதாசீனம் செய்து, நில சுவீகரிப்பு முயற்சிகள் வடக்கில் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன.
மண்டைதீவில் கடற்படையின் வசமுள்ள 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்யும் பணிகள் வரும் 11ம் திகதி காலையில் இடம்பெறவுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
நேற்று- வரவு செலவு திட்ட வாக்களிப்பு வரை- தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டதெற்கெல்லாம் தலையாட்டிய பிரதமர் தலைமையிலான அரசு, நில விடுவிப்பு தொடர்பில் பல வாக்குறுதிகள் வழங்கியிருந்தது. அதேபோல, வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஜனாதிபதியும் வாக்குறுதிகள் வழங்கியிருந்தார். நில விடுவிப்பு தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும்போது,
புதிய காணிகளை சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது. இதையடுத்து, ஆளுனர் மற்றும் படையினருடன் இணைந்து அந்தப்பகுதி எம்.பிகள் கலந்துரையாடுவதென்றும், அந்த சந்திப்பில் இறுதி முடிவு எட்டப்படும்வரை, காணி சுவீகரிப்பை இடைநிறுத்த உத்தரவிடுவதாக ஜனாதிபதி அரைமனதாக சம்மதித்திருந்தார்.
இந்தநிலையில், மண்டைதீவில் அமைந்துள்ள வெல்சுமன கடற்படை தளம் அமைந்துள்ள 18 ஏக்கர் காணியையும் நிரந்தர சுவீகரிக்க திட்டமிடப்பட்டு, அளவீட்டு பணிக்கு முன்னதாக காணி உரிமையாளர்களிற்கு அறிவித்தல் விடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் வழங்கிய உத்தரவாதங்களின் பின்னர் அந்த அளவீட்டு பணி கைவிடப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அது கைவிடப்படவில்லை. வரும்
11ம் திகதி அளவீட்டு பணிகளிற்கான ஆயத்தங்கள் நடந்து வருகிறது.
அன்றையதினம் காலை 9 மணிக்கு அளவீடு செய்யப்படவுள்ளது.
மண்டைதீவிலுள்ள நன்னீர் கிணறு, வளமான மண் அமைந்துள்ள பகுதியை கையப்படுத்தி, இந்த கடற்படை முகாம் அமைந்துள்ளது. அளவீட்டு பணிகள் நடந்தால், மண்டைதீவின் வளமான பிரதேசங்கள் தமிழ்மக்களின் கையை விட்டு செல்லும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.