வீரம் விளைத்த விடுதலை வீரரைப் பாடுவோம் வாரீர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

வீரம் விளைத்த விடுதலை வீரரைப் பாடுவோம் வாரீர்!


விழுப்புண் படாத நாளெல்லாம்
வீணான நாளென வெறுத்தொதுக்கும் வீரரிவர.;
கருத்தொருமித்துக் காரியம் ஆற்றிக்
கொழுப்பெடுத்தாடிய சிங்களப் படைகளை
இழுத்தறுத்துப் போட்ட அசகாய சூரரிவர்.

தழும்பாத நிறை குணமும் வீரத்தழும்புகள்
சுமந்த நிறையுடலும் கொண்டோர்
கொழுந்து விட்டெரியும் போர்க்குணம் மிக்கவர்!
கொந்தளி;த்தெழுந்து போராடிக் கொழும்பையும்
தம் வசப்படுத்தும் வல்லமை கொண்டோரை வாழ்த்துவோம் வாரீர்!

போர் முரசு அதிர்ந்து ஆரவாரம் செய்த
எழுச்சி மிக்க நாடு எங்கள் ஈழநாடு
வேரிலே போர்க்குணம் மிக்க உண்டு
மார்பிலே எக்கணமும் ஏந்துவர் குண்டு!
மானமும் வீரமும் தீரமும் நெஞ்சில் ஈரமும்
போரே வாழ்வெனக் கொண்ட புலிமாவீரரை வாழ்த்துவோம் வாரீர்!

தமிழீழத் தேரை உருட்டும் அச்சாணியே மாவீரர்
அவர் திருப்புகழை உச்சாணியில் ஏற்றி
முரசு கொட்ட அணிதிரள்வோம் வாரீர்!
போர் உணர்ச்சியே! மனிதனின் முதல் உணர்ச்சி
என்கிறது சங்க இலக்கியம்
அச்சங்க இலக்கியத்தை மீண்டும் புதுக்கிய
தலைவனின் பிள்ளைகளை வாழ்த்துவோம் வாரீர்!

கலைகளும் கவிகளும் வீரத்தின் அடிப்படையில் பிறந்தவை
விலையிலா ஈகமும் மண்டியிடா மானமும்
நெஞ்சில் உணர்வைச் சுண்டி இழுக்க வில்லையெனில்
நீ என்ன வண்டி இழுக்கும் மாடா?
புதிய புறநானூறு எழுதிய புலிமா மறவரைப்பாடப்
புரட்சிக் கவியே எழுந்து வாடா!

படை வலுவில் ஒத்த ஆற்றல் இருந்தாலும்
இல்லாவிடினும் வரும் தடை யாவும் உடைத்துப்
பொடிப் பொடியாக்கி வெற்றிக் கனியை இரட்டிப்பாகத்
தட்டிப் பறிக்கும் படை எதுவெனில்? அதற்கு விடை
எதற்கும் அஞ்சாத வடக்கும் கிழக்கும் மீட்டெடுக்க
உயிர் கொடுத்த புலி மறவர் படையெனத்
தெற்கும் சொல்லும் மேற்கு உலகும் சொல்லும்!
விளக்கேற்றி வழிபடுவோம் வாருங்கள் திசைமாறாப்
பயணம் செய்தவர் பாதம் பணிவோம் வாருங்கள்!

ஈழமெனும் வயல் விளைந்து செழிக்க
குருதிப் புனல் ஊற்றி உரமாக வீழ்ந்தவர்
மழை போல் எறிகணை வீழினும் அஞ்சாது
உயிரைக் கொடையாய் தந்தவர்
பஞ்சணையில் படுத்துறங்கவில்லை இவர்கள்;
வெஞ்சமரில் உயிர் கொடுத்தவர்கள்; தஞ்சமென
யார் காலிலும் வீழாத நெஞ்சம் நிறைய வீரம் சுமந்த
தமிழீழ மாவீரர் புகழ் பாடிப் பரவுவோம் வாருங்கள்

வானம் நாணும் உமது ஈகம் கண்டு கதிரவன்
நாணி மேற்கு வானம் சாய்வான் உமது ஒளிமுகம் கண்டு
புயலும் நாணும் உமது வேகம் கண்டு பூவும் நாணும்
உமது மென்னுள்ளம் கண்டு வார்த்தையில் வள்ளன்மை
இல்லாதவன் எப்படி வாழ்த்துவேன் உம்மை இன்று!
வல்லமையோடு வள்ளன்மையும் தருக!
எம் காவல் தெய்வங்களே! என வாழ்த்துவோம் வாரீர்!

ஏழ்கடல் பொங்கி ஆர்ப்பரித்தாலும் ஆழ்கடல்
தோறும் காவல் நின்றவர் சூழ்கலி நீங்கி நாம்
செழிப்பாக வாழ வார்கடல் உலகில் தம்
உயிர்ப் பூவை அழித்தவர் கண்காணிப்புக் கருவிகளின்
கண்களில் மண்ணைத் தூவி விட்டு விண்ணையளந்து
வீரம் விளைத்த விடுதலை வீரரைப் பாடுவோம் வாரீர்!

மாடி வீட்டில் பஞ்சணையில் இதமாக நாம் துயிலப்
பாடி வீடெங்கும் தாயகம் மீட்கத் தூயகத்தோடு
மழையென்ன, பனியென்ன, வெயிலென்ன, குளிரென்ன
ஒடியோடி ஓய்வின்றிக் களப்பணி புரிந்தவர்.
நெல்லியடியில் பெரும் படையெடுத்து வந்து படமெடுத்தாடி நின்ற
கண்கொத்திப் பாம்புகளை எண்பத்தியேழில்; அடியோடழித்த
ஆடி ஐந்தை நினைத்துப் பாருங்கள்! நாடி நரம்பெல்லாம்
ஒடுங்கிப் போகும் தமிழினத்திற்கோர் புது வரலாறு ஈட்டித் தந்தோர்
திருநாளில் திரள் திரளாய்க் கூடி வந்து விளக்கேற்றி வழிபடுவோம் வாரீர்!

கவிஞர் த . மதி