நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் பற்றிய சுவாரஸ்ய மற்றும் வரலாற்று தகவல்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 20, 2019

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் பற்றிய சுவாரஸ்ய மற்றும் வரலாற்று தகவல்கள்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேர அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வருவோர் தங்கிச்செல்வோரே அதிகமானோர். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.
நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. திராவிட இனமாகிய தமிழர்களின் முன்னோர்களாக, நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழ்பாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன.
நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.