தமிழகத்தின் திருப்பூரில் சொகுசு பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் இருந்து 26 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. நேற்று நள்ளிரவு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அங்குள்ள பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி அப்பேருந்து விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு பொலிசாரும், தீயணைப்பு துறை வீரர்களும் விரைந்தனர். அப்போது சொகுசு பேருந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் சிதைந்துபோய் இருந்தது.
அதன் பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், பேருந்து ஓட்டுநர் ஜெய்சன் மதுபோதையில் பேருந்தை ஓட்டியது தெரிய வந்தது