மாவீரர் நாளைக் காதல் செய்வோம்! (வீடியோ) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 16, 2019

மாவீரர் நாளைக் காதல் செய்வோம்! (வீடியோ)

விதையாக மண்ணில் வீழ்ந்து அம்மண்ணை
உதைத்துப் புதுப் புலியாக எழுக! – வெறும்
கதையாகப் போய் விடாது. சிதையாகிப்
போனாலும் சிதையாதும் வீரம்! வீரக்காதையாக
நாளை வரலாற்றில் இருப்போரே வாழ்க!
மாவீரரே துயில் எழுந்திடுவீரென
எந்தக் கல்லறையில் தேடுவீர்?
இதய அறையில் துயிலும் மாவீரரை
எழுப்ப எந்தக் கல்லறையும் தேவையில்லை
கார்த்திகைத் திங்கள் அதிகாலை நேரம்
கனமழை பொழியக் கருக்குது வானம்!
நேர்த்தியாய் பூத்திருக்கும் காந்தள் மலர்கள்
கொண்டு கட்டிய மாலைகள் பூர்த்தியாயிற்று
கீர்;த்தி பொங்கும் மாவீரச் செல்வங்களே
நாம் எல்லாம் உங்கள் திருவடித் தூசி!
சோர்வினை நீக்கி எமக்கு உற்சாகம் தர
எழுந்திடுவீர்! துயில் எழுந்திடுவீர்!
கல்லையும் கனிய வைக்கும் பேச்சு
நச்சு வில்லைகள் கழுத்தினில் சுமந்து
எல்லைகள் தோறும் தமிழினத்தின் தொல்லைகள்
தீர காவல் செய்த தெய்வங்களே! எல்லைகள்
பிரிந்து ஈழம் மலரும். கல்லறைக்
கோவில்கள் மீண்டும் உருவாகும்
நாதமணிச் சத்தம் மறுபடியும் கேட்கும்!
தேனோங்கு சோலை மரங்கள் யாவும்
பூத்துக் குலுங்குவது யாருக்காக? வானோங்கு
புகழ் கொண்ட மாவீரர்களே! உங்களின் பாதம்
தரிசிப்பதற்காக, நானோ இங்கு கொணர்ந்திருப்பது
மான மாவீரர்க்குச் செந்தமிழ் மாலை
காவிய நாயகன் பிரபாகரனின்
வழி நடந்த வேங்கைகளின் மாவீரம்
ஆயிரம் ஆண்டுகள் போனாலும் நிறம் மாறாத
அஜந்தா ஓவியம் போல் உலகத் தமிழரின்
நெஞ்சினில் அழியாத உயிரோவியமாய்
இருக்கும் இது நிஜம் தான்.
இன்றும் இனி வரும் ஏழேழு பிறவியிலும்
எங்கள் தமிழ் உலகம் உங்கள் புகழ் பாடும்
எல்லாள மன்னனை இன்றும் நினைப்பது போல்
மல்லாண்ட திண்தோள் மாவீரர் தம்மை பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி
நூறாயிரங் காலம் வாழ்த்தும்!
பிரபாகரன் வழி வந்த பிள்ளைத் தமிழ்களின்
வீரத்திற்கு இப்புவியில் நிகராக ஏதுமுண்டா கூறு!
மாவீரர் என்பவர் ஈழத்து மண்ணின் வீரஇலக்கியம்
புதிய புறநானூறு! இலை என்று மறுப்பவர் யாரு? நாளை
வீரஇலக்கணம் எழுத புலவர்கள் தோன்றுவார் நூறு!
விழுப்புண்ணூறு பட்டவர் திருமேனி மீது
கண்நூறு படலாம். கண்ணேறு படுவதுண்டோ?
ஏறு புலி வீரம் ஏறும்! முருகனுக்கே நிகரான
தலைவன் முகம் நினைந்து ஏறு புலி வீரம் ஏறும்!
மாறுபடு சூரரை வதைத்த புலி மாவீரம்
நினைந்து புகழ்ந்து தமிழ் உலகம் கூறும்!
தங்கத்தை வேண்டுமானால் உரசிப் பாருங்கள்
மாசிலாத் தங்கமாவீரரை நினைந்து
ஒரு சுடர் ஏற்றுவோம் வாருங்கள்!
இறுதியாய் மரணித்த சிவபுரத்தரசியே
உறுதியாய் கூறுகிறோம் மாவீரர்
சாகலாம் தமிழ் மாவீரம் சாகாது!
தமிழீழ மண் மீது அதீதக் காதல்
தமிழன்னை மீது தீராக் காதல்
தமிழ்மொழி மீது அமுதக் காதல்
தமிழீழ மக்களின் மீது அன்புக் காதல்
தலைவன் மீது அளவில்லாக் காதல்
கொண்டவர் மாவீரர். அந்த
மாவீரர் நாளைக் காதல் செய்வோம்!
கவிஞர் மதி