ஓ.எல் பரீட்சையில் மகள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியடையவில்லை என்ற காரணத்தால் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாயாரின் மகள் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார். நேற்று வெளியாகிய பரீட்சையில் 3 ஏ சித்திகளும் 6 பி சித்திகளும் பெற்றுள்ளார். அதிலும் விஞ்ஞான பாடத்தில் பி சித்தியே பெற்றதால் அப்பாடசாலையில் உயர்தரப் பிரிவில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மகள் உயிரியல் பிரிவில் கற்று வந்துள்ளார். அப்பிரிவில் கற்பவர்கள் விஞ்ஞானத்தில் ஏ சித்தி பெற்றால் மட்டுமே தொடர்ந்து அதே பிரிவில் கல்வி கற்க அனுமதிப்போம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதன் பின்னரே மாணவியின் தாயார் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது.
மாணவியைக் கடுமையாகத் தாக்கிய பின்னர் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டியுள்ளார். இதனையடுத்து மகள் கத்திக் குளறவே அயலவர்கள் புகுந்து கதவை திறந்து தாயாரை வெளியே கொண்டு வந்ததாக தெரியவருகின்றது.
குறித்த மாணவியின் தாய் பெண்கள் உரிமை அமைப்பின் பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.