அகவை அறுபத்திரெண்டு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

அகவை அறுபத்திரெண்டு


தொன்மைத் தமிழரின் புரட்சியின் முழக்கம்

அடிமைக் கடலில் தத்தளிப்போர்க்கு
பிரபாகரமே துறை சேர்க்கும்
கலங்கரை விளக்கம்!

எண்ணிரெண்டு கோடிச் செவிகளும் தலைவா
உன்னுரை கேட்டால் வெடித்தெழும்!
விண்ணிருந்து கூடி வானவரோடு மாவீரர் இமையாக்
கண்களும் உன் வீரநடை காணத் துடித்தெழும்!

தந்திர உத்திகள் முப்பத்திரெண்டும்
அறிந்த ராஜதந்திரிக்கு, தமிழ்
மண்ணில் எழுந்த மிக நல்ல தலைவனுக்கு
அவவை அறுபத்திரெண்டு! மேகமெனத் திரண்டு
வாழ்த்துக்களை மழையெனப் பொழியுங்கள்

ஆயுதங்களைக் கையாளும் திட்ப, நுட்பம்
சிறந்த சூத்திரம் கற்றவன். அமராபரணண்!
உலகமே எதிர் கொண்ட போதும் ஆர்த்தெழுந்து
போர்த்திறன் உலகிற்குக் காட்டியவன்
நேர்த்திறன் பிசகாது வாழ்ந்து காட்டியவன்!
பாத்திறம் கொண்டு எங்கள் காவலனை வாழ்த்த
கவித்திறன் கொண்டோரே எழுக!

மரத்தின் கோணலைச் செப்பம் செய்யும்
எற்று நூல் போல, உலகத்தமிழரின்
மனத்தின் கோணல் மாணலைப் புரட்சி
எனும் கல்வி நூலால் சீராக்கி, நேராக்கி
ஒரு குடையின் கீழ் நிறுத்திய புரட்சித் தலைவனுக்கு
அகவை அறுபத்திரெண்டின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்!



மின்னல் ஒளி கண்டு மலரும் தாழம் பூப்போல எங்கள்
அண்ணலே! உன்குரல் கேட்டால் நாடி நாளங்கள்
யாவும் புது ரத்தம் பாய்ந்து வீரம் பூப்பூக்கும்!
புள்ளினங்கள் ஆர்க்கும்; வண்டினங்கள் ஓங்காரங் கொண்டு
ரீங்காரம் செய்யும்; மயில்கள் அகவும்

தோகை விரித்தாடும் வாகை மலர் பறித்து
மாலை கட்டுங்கள் வெற்றி வாகை சூடிய
தலைவனின் உறுமல் ஒலி கேட்கிறது
மண்ணதிர, விண்ணதிர வீரம் விளைத்தவனை
கண்ணெதிரே கண்டவர் போல் வாழ்த்தொலிகள் முழங்கட்டும்!

பிறன் நிலத்தை விழுங்கும் பேராசை அற்றவன்
தன் நிலத்தை தன்னினமே ஆளவேண்டும் எனும்
தீரா வேட்கை கொண்டவன்! பிறன் மனை நோக்காத
பேராண்மை பெற்றவன்! உயிரினும் உயர்வாக
ஒழுக்கத்தைக் கொண்ட கொற்றவன்!

நூலுக்குப் பத்து வகை அழகு! வேலுப்
பிள்ளை பிரபாகரனின் சிந்தனை ஒவ்வொன்றும்
ஓர் அழகு! காலனைக் காலால் உதைத்த
கரிகாலனுக்கு அகவை அறுபத்திரெண்டு
பழகிய தமிழாலே அழகிய முருகனை வாழ்த்துகிறோம்!

பாயிரம் இல்லாதது நூலல்ல! அது போல
சுதந்திரம் இல்லாதது நாடல்ல! சுதந்திரத்
தமிழீழ நாட்டை அமைக்க, பதின்ம வயதில்
சுகம் தரும் வீட்டை விட்டுப் புறப்பட்ட காவிய
நாயகன்! புகழ் மேவிய காவியன்! சுடரொளி
தூவிய சூரியனைப்பாட ஆயிரம் கவிகாள் எழுக!

ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கி உறு
பெரும் பீரங்கிகள் கொண்டு முழங்கி
புறநானூறு புகன்ற வலவன் ஏவா வானவூர்தியை
வலவன்களைக் கொண்டு வான்படை கட்டி வானோங்கி
புதிய புறநானூறு எழுதிய வல்லவனாம் தமிழர்
உள்ளமெல்லாம் நிறைந்துள்ளவனாம் பிரபாகரன்
காலத்தைப் போற்றுங்கள்! சுதந்திரத் தமிழீழ
தீபம் ஏற்றுங்கள்!

வீட்டுக்கொரு பிள்ளையை விடுதலைக்கு தாவென்று
கேட்டு வீரப்புலி ஆக்கியவன்! விட்டுக் கொடுக்காமல்
இறுதி வரை தாக்கியவன்! சிட்டுக் குருவியினம் வாழ
கைபேசிகளை சிக்கனப்படுத்திய வரிப்புலியே!

சீருடை தரித்து நீ வீறுநடை போட்டால்
பாரிடை வாழ் தமிழர் மேனி சிலிர்க்கும்!
மழையீரம் கண்டால் மண் குளிருமது போல்
தலைவீரம் கண்டு ஈழத்தாயவள் கண் குளிரும்!

தளை யாவும் அறுத்தெறியத் தலைவா
உன் குரல் காட்டு! பிழையேது செய்தோம்
அதை உன் சுட்டு விரலால் சுட்டிக் காட்டு!
கை வலித்தாலும், கால் வலித்தாலும் ஈழவயலெங்கும்
முள்மரங்கள் களைந்தெறிய அறுபத்திரெண்டில்
நீ வரவேண்டும் வீரநடை போட்டு!

கவிஞர், த. மதி